பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அக்யூஸ்ட்’. இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் - சச்சின் சினிமாஸ்- ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் உதயா - 'தயா' என். பன்னீர்செல்வம் - எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் அஜ்மல் பேசுகையில், “ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்று துணிந்து செயலில் ஈடுபட்டால், அவருக்கு இந்த உலகமே துணை நிற்கும் என்பார்கள். இதற்கு மிகப்பெரிய உதாரணம் உதயா. அவர் இந்த படத்திற்காக எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதை படத்தின் பணிகள் தொடங்கிய முதல் நாளிலிருந்து எனக்குத் தெரியும்.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் என் கதாபாத்திரத்தை மட்டுமல்ல மலர் என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தையும் உதயாவின் கதாபாத்திரத்தையும் நன்றாக செதுக்கியிருந்தார். 'அஞ்சாதே' படத்தில் பணியாற்றிய போது எனக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது. 'கோ' படத்தில் பணியாற்றிய போதும் பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது அதேபோன்று பாசிட்டிவ் எனர்ஜி இந்தப் படத்தில் பணியாற்றிய போதும் எனக்கு கிடைத்தது. அதனால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
இதனிடையே இந்நிகழ்வில் சண்டை கலைஞர் எஸ் மோகன்ராஜ் - மூத்த நடிகை சரோஜாதேவி - இயக்குநர் வேலு பிரபாகரன் ஆகியோரின் மறைவிற்கு உதயாவின் வேண்டுகோளை ஏற்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.