Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

மெகா ஹிட்டும் உண்டு, மகா ஃப்ளாப்பும் உண்டு... அஜித்தின் பொங்கல் வரலாறு!

தமிழ்நாட்டில் பண்டிகைகள் என்றால், புத்தாடை, உணவு என்ற வரிசையில் அடுத்து நிற்பவை புதுப்படங்கள்தான். தமிழ் சினிமாவில் தீபாவளி, பொங்கலுக்கு வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அதற்கேற்ப படங்களிலும் பண்டிகைகள் சார்ந்த விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். அட்டகாசம் படத்தில் 'தீபாவளி, தல தீபாவளி' பாடல், 'சிவகாசி'யில் 'தீபாவளி, தீபாவளி' பாடல், 'விருமாண்டி'யில் ஜல்லிகட்டுக் காட்சிகள், 'போக்கிரி'யில் 'இந்தப் பொங்கல் சூப்பர் கலெக்ஷன்மா' எனும் வசனம்...இப்படி பண்டிகை சார்ந்த விஷயங்களை வைத்து கொண்டாட்டமாக மாற்றுவார்கள். அதிலும் பொங்கலுக்குத் தங்கள் படங்களை வெளியிடுவது என்றால் தயாரிப்பாளர்களுக்கும் குஷிதான். அதிக நாட்கள் விடுமுறை கொண்ட பண்டிகை என்பதால் தியேட்டருக்கு குடும்பத்துடன் வருவார்கள், படத்திற்கான கலெக்‌ஷனும் அதிகரிக்கும். தீபாவளி என்றால் அதிரடி ஆக்ஷன் படங்கள், பொங்கல் பண்டிகையின்போது பெரும்பாலும் கிராமத்துப் பின்னணி கொண்ட, கலகலவென நகரும் படங்களை வெளியிடுவது வழக்கம். தூள், விருமாண்டி, வீரம் என கிராமப் பின்னணியில் படங்கள் வந்து ரசிகர்களுக்கான செம பொங்கல் ட்ரீட்டாக அமைந்திருக்கின்றன.

இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் அஜித்தின் விஸ்வாசம் பக்கா கிராமப் பின்னணியும் கொண்ட படம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அது மட்டுமல்லாமல் 23 வருடங்கள் கழித்து பொங்கலுக்கு ரஜினியின் படமும் வெளியாகிறது. இவர்கள் இருவரும் முதன் முறையாக ஒரே நேரத்தில் தங்களின் படத்தை வெளியிடுகின்றனர். இத்தனை சிறப்புகள் இருக்கின்றன தமிழ் சினிமாவில் இந்தப் பொங்கலுக்கு. அஜித்துக்கு இதற்கு முந்தைய பொங்கல்கள் எப்படி இருந்திருக்கின்றன? பார்ப்போம்...

 

vanmathiமுதன் முதலில் அஜித் நடித்து பொங்கலுக்கு வெளியான படம் 'வான்மதி'. 1996ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வெற்றியும் பெற்றது. 'காதல் கோட்டை' என்ற மெகா ஹிட் படம் உருவாக வான்மதி தான் அடித்தளமாக அமைந்தது. 'வான்மதி' வெற்றியைத் தொடர்ந்து 'காதல் கோட்டை' அதே வருடம் ஜூலை மாதம் வெளியானது. அடுத்த வருடம் 1997ஆம் ஆண்டு பொங்கலுக்கு சத்ரியன் படத்தை இயக்கிய சுபாஷ் இயக்கத்தில் 'நேசம்' என்ற படத்தில் அஜித் நடித்து வெளியானது. அது பெரிய வெற்றி இல்லை. 1999ஆம் ஆண்டு பொங்கலுக்கு நடிகர் ரமேஷ் கண்ணா இயக்கத்தில் வெளியான படம்தான் 'தொடரும்'. 'காதல் கோட்டை' வெற்றி ஜோடியான அஜித் - தேவயாணி இந்தப் படத்தில் மீண்டும் சேர்ந்தனர். காதல் கோட்டை கட்டியவர்கள் இதில் கணவன் மனைவியாகினர். வெற்றி பெற்ற இந்தப் படத்தின் மூலம் நடிகர் அஜித்துக்கு ஒரளவிற்கு குடும்பப்  பார்வையாளர்கள் கிடைத்தார்கள்.

2000ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியான இரண்டு படங்கள், ரஜினி கமலுக்கு அடுத்து அஜித் - விஜய் ரைவல்ரி தொடங்க முக்கிய பங்காக அமைந்தன. அஜித் நடித்து 'தீனா'வும், விஜய் - சூர்யா நடிப்பில் 'ப்ரண்ட்ஸ்' படமும் வெளியானது. 'தீனா' படத்திலிருந்துதான் அஜித்தை 'தல' என ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினார்கள். அந்தப் பக்கம் விஜய் படம் காமெடி, செண்டிமெண்ட் என குடும்பங்களை ஈர்க்க 'தீனா'வோ அடிதடியாக, அதிரடியாக இளைஞர்களின் படமானது. 'ப்ரண்ட்ஸ்' மெகா ஹிட், ‘தீனா’ சூப்பர் ஹிட் என இரண்டுமே செம ஹிட் அடித்தன. 'தீனா'வை இயக்கியவர் தற்போது முக்கிய இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ். 

 

dheena friendsகாதல் பாதையிலிருந்து ஆக்ஷன் பாதைக்கு மாறிய அஜித்துக்கு வெறித்தனமான ரசிகர்கள் உருவாக, அமர்க்களம், தீனா, சிட்டிசன் வெற்றியை தொடர்ந்து 2002ஆம் ஆண்டு பொங்கலில் ரெட் பெரிய ஓப்பனிங்குடன் ரிலீஸானது. ஆனால், படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தாமல் போக 'ரெட்' தோல்வியானது. இந்தப் படத்தை இயக்கியவர் காமெடி நடிகர் சிங்கம்புலிதான். அப்போது ராம்சத்யா என்ற பெயரில் ரெட் படத்தை இயக்கினார்.

அதன் பிறகு மேடு பள்ளங்களை சந்தித்த அஜித்தின் கேரியரில் நான்கு வருடங்கள் கழித்து 2006ஆம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் 'பரமசிவன்' வெளியானது. பி.வாசு, அதற்கு முன்புதான் 'சந்திரமுகி' எனும் மெகா பிளாக்பஸ்டரைக் கொடுத்திருந்தார் என்பதால் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமில்லாமல் 'நான் கடவுள்' படத்திற்காக அஜித் உடலை மிகவும் சிரமப்பட்டு குறைத்து, ஒல்லியான தோற்றத்தில் இருந்தார். 'நான் கடவுள்' படத்தில் அஜித் நடிக்காததைத் தொடர்ந்து பரமசிவனில் நடித்திருந்தார். இந்த பொங்கலில் மீண்டும் அஜித் - விஜய் போட்டி. அஜித்தின் பரமசிவனுடன் விஜயின் ஆதி மோதியது. இதற்கும் பெரிய எதிர்பார்ப்பு. விஜயை ஆக்ஷன் பாதைக்குத் திருப்பிய 'திருமலை' இயக்குனர் ரமணா இயக்கியதால் பெரிய எதிர்பார்ப்பு. ஆனால் இரண்டு படங்களுமே எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. இவற்றோடு வெளியான சிம்புவின் ‘சரவணா’ சுமாரான வெற்றி பெற்றது.

 

paramasivan aadhiஅடுத்த வருடமே மீண்டும் போட்டி. அதற்கு முந்தைய தீபாவளியில் 'வரலாறு' படைத்த அஜித் பொங்கலுக்கு 'ஆழ்வா'ராக வந்தார். 2006 பொங்கல் போட்டிக்குப் பிறகு திருப்பதி, வரலாறு என இரண்டு வெற்றிகளைக் கொடுத்திருந்தார் அஜித். ஆனால், விஜய் ஆதி பட தோல்வியைத் தொடர்ந்து பொறுமையாக ஒரு வருடம் கழித்து அடுத்த பொங்கலுக்கு 'போக்கிரி'யாக வந்தார். அந்தப் போட்டியில் அஜித்தின் ஆழ்வார் படுதோல்வி அடைந்தது.  அந்தப் பொங்கல் போக்கிரிப் பொங்கல் ஆனது. ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான ‘தாமிரபரணி’ வெற்றிப் படமானது.

இதற்குப் பிறகு ஏழு வருடங்கள் கழித்து அஜித்தின் 'வீரம்', விஜய்யின் 'ஜில்லா' படங்கள் 2014 பொங்கலுக்கு வெளியாயின. இதில் வீரம் நல்ல ஹிட் அடிக்க, ஜில்லா விஜய்யின் வழக்கமான படமானது. இப்படி அஜித்தின் கேரியரில் பல பொங்கல் ரிலீஸ் படங்கள் இருந்திருக்கின்றன. மெகா ஹிட்டுகளும், மகா ஃப்ளாப்களும் இதில் அடக்கம்.

 

veeram jillaஅஜித் - சிவா கூட்டணியில் இரண்டு படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றவை. 'விஸ்வாசம்' அந்த வரிசையில் நிற்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். இந்தப் பொங்கல் 'தல' பொங்கலாக அமையுமென்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில், தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது, ஏழு, எட்டு படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் பெரும்பாலானவை பெரிய நட்சத்திரங்களின் படங்களாகவும் இருந்திருக்கின்றன. சில ஆண்டுகளாக பண்டிகைகள் என்றாலும் கூட, ஒரே நாளில் பெரிய நட்சத்திரங்களின் படங்களை ஒன்றாக வெளியிடுவதைத் தவிர்த்து வந்தார்கள். வணிகக் காரணங்கள் சொல்லப்பட்டன. இப்போது இரண்டு பெரிய படங்கள் வெளியாகின்றன. காரணம் என்னவாக இருந்தாலும், ரசிகர்களுக்கு டபுள் விருந்தாக அமையுமென்று நம்புவோம்.     

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்