ajithkumar tribute to Ayrton Senna statue

அஜித்குமார் கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவரது கலை சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியது.

சினிமாவை தாண்டி கார் ரேஸில் ஆர்வம் உள்ள அஜித் முன்னதாக அதிலும் கவனம் செலுத்தி வந்தார். இடையில் எந்த கார் ரேஸ் போட்டியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஜனவரி முதல் கார் ரேஸில் அதிக தீவிரம் காட்டி வருகிறார். துபாய் ஆரம்பித்து போர்ச்சுக்கல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடக்கும் போட்டியில் தனது ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணி மூலம் கலந்து கொண்டு வருகிறார். இதில் சில போட்டிகளில் வெற்றியும் கண்டுள்ளார். இன்னும் 12 போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில் அஜித், இத்தாலியில் இமோலா சர்க்யூட்டில் இருக்கும் புகழ்பெற்ற கார் ரேஸரான அயர்டன் சென்னா சிலைக்கு மரியாதை செலுத்தினார். அப்போது அவரது சிலையின் காலடியில் முத்தமிட்டு தனது ஹெல்மெட்டை அவரது காலடியில் வைத்து வணங்கினார். அப்போது அஜித் மிகவும் எமோஷ்னலாக காணப்பட்டார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கார் ரேஸர் அயர்டன் சென்னா பிரேசில் நாட்டை சேர்ந்தவர். ஃபார்முலா 1 உலக சாம்பியன் பட்டத்தை மூன்று முறை வென்று சாதனை படைத்துள்ளார். 1994ஆம் ஆண்டு அஜித் பிறந்தநாளான மே 1ஆம் தேதி இத்தாலியில் இமோலா சர்க்யூட்டில் நடந்த ஃபார்முலா 1 போட்டியின் போது தனது கார் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.