அஜித்குமார் கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலே அவர் நடிகக்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்திலும் கே.ஜி.எஃப். நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாகவும் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
சினிமாவை தாண்டி கார் ரேஸில் ஆர்வம் உள்ள அஜித் முன்னதாக அதிலும் கவனம் செலுத்தி வந்தார். இடையில் எந்த கார் ரேஸ் போட்டியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஜனவரி முதல் கார் ரேஸில் அதிக தீவிரம் காட்டி வருகிறார். துபாய் ஆரம்பித்து போர்ச்சுக்கல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடக்கும் போட்டியில் தனது ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணி மூலம் கலந்து கொண்டு வருகிறார். இதில் சில போட்டிகளில் வெற்றியும் கண்டுள்ளார். சமீபத்தில் மொட்டை அடித்து தனது கெட்டப்பை மாற்றியிருந்தார்.
இப்போது பிரான்சில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு வருகிறார். அப்போது அஜித்திடம் தொகுப்பாளர், எஃப்1(F1) படத்தில் பிராட் பிட் நடித்ததை போல, இந்தியாவில் 24H சீரிஸ் குறித்த படத்தில் நீங்கள் நடிப்பீர்களா எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அஜித், “பொதுவாக என் படங்களில் நானே ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பேன். அதனால் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் மற்றும் எஃப்1 படங்களின் அடுத்த பாகத்திற்கு அழைப்பு வந்தால் ஏன் நடிக்காமல் இருக்கப் போகிறேன்” என்றார். இந்த பதில் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடித்த எஃப்1 படம் கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியானது. இப்படம் எஃப் 1 கார் ரேஸை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக எஃப் 1 கார் ரேஸில் பிராட் பிட் போட்டியில் பங்கேற்காமல் அந்த ட்ராக்கில் கார் ஓட்டியதாக கூறப்படுகிறது. இப்படம் தற்போது பாக்ஸ் ஆஃபிசில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. முன்னதாக அஜித் துபாயில் நடந்த கார் ரேஸில் பங்கேற்ற போது அவரது ரசிகர்கள் அங்கு சென்று அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்ததை பார்த்த போட்டியின் வர்ணனையாளர், அஜித்குமார் அவரது இடத்தில் பிராட் பிட்டை விட பெரிய நட்சத்திரமாக இருக்கக்கூடும் எனப் பேசியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.