‘ரெடி டூ ரேஸ்...’ - களமிறங்கிய அஜித்!

Ajithkumar Race company logo released

கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ‘குட் பேட் அக்லி’ படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் ஆர்வம் கொண்ட அஜித், அதிலும் நேரம் கிடைக்கும் போது கவனம் செலுத்தி வருகிறார். 2003ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசிய பிஎம்டபள்யூ சேம்பியன்ஷிப், 2010ல் ஃபார்முலா 2 சேம்பியன்ஷிப் உள்ளிட சில போட்டிகளில் போட்டியிட்டார். இதைத் தொடர்ந்து எந்த கார் ரேசிலும் பங்கேற்காமல் இருந்த அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2025ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் பிரிவில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தி ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா சமீபத்தில் தெரிவித்திருந்தது. மேலும் அவரது நண்பரும் கார் பந்தய வீரருமான நரேன் கார்த்திகேயனும் அஜித் பங்கேற்க திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அஜித் விரைவில் நடக்கவிருக்கும் ஐரோப்பியன் ரேஸிங்கில் பங்கேற்கவுள்ளதாகவும் அதற்காக துபாயில் கார் ஓட்டும் சோதனை பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து, ‘அஜித்குமார் ரேஸின்’என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை நடிகர் அஜித்குமார் தொடங்கினார். ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற அணி பெயரில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பேபியன் என்பவர் ஐரோப்பியா சீரிஸ் 992 ஜிடி3 கப் பிரிவில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ajithkumar Race company logo released

இந்த நிலையில், ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார் என்றும், அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ACTOR AJITHKUMAR car race
இதையும் படியுங்கள்
Subscribe