நடிகரும் ரேஸருமான அஜித்குமார் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணி மூலம் துபாய் தொடங்கி போர்ச்சுக்கல் வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் சில விபத்துகளையும் சந்தித்தார். ஆனால் பெரிதாக காயம் ஏதும் இல்லாமல் தப்பித்தார்.
முதலில் துபாயில் நடந்த 24ஹெச் சீரிஸில் மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தினார். அதன் பிறகு நடந்த போட்டிகளில் கவனிக்கத்தக்க இடங்களை பிடித்திருந்தார். இதைதொடர்ந்து ஸ்பெய்னில் சமீபத்தில் நடந்த 24ஹெச் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். இந்த போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோவை, அவரது கார் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியிருந்தார். இதற்காகவும் போட்டியில் வெற்றி பெற்றதற்காகவும் தற்போது தமிழ்நாட்டின் துணை முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உதயநிதி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “நடிகரும் - நண்பருமான அஜித்குமாரின் கார் ரேஸ் அணி, 24ஹெச் சீரிஸில் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கும்- அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை, கார் - ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அஜித்தின் அணி இன்னும் பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் கார் ரேஸ் அணி சார்பில் உதயநிதி, தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
அஜித், கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இருப்பினும் படக்குழு சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.