Skip to main content

புதிய அணியை உருவாக்கிய அஜித்

Published on 28/09/2024 | Edited on 28/09/2024
ajith start car race team

தனது இளமை பருவத்திலிருந்தே கார் மற்றும் பைக் ரேசில் ஆர்வமுள்ளவராக இருந்து வருபவர் அஜித் குமார், இது அவரின் படங்களிலும் அவ்வப்போது எதிரொலிக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக அவரின் பில்லா, மங்காத்தா, வலிமை உள்ளிட்ட பல படங்களில் கார் மற்றும் பைக் ரேஸ் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். இதில் குட் பேட் அக்லி படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதனிடையே அஜித், மோட்டார் சைக்கிள் சுற்றுலாவில் ஆர்வமுள்ளவர்களுக்காக ‘வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்’ என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். 

முன்னதாக கார் ரேஸ் போட்டியிலும் பங்கேற்றிருந்தார் அஜித். 2003ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசிய பிஎம்டபள்யூ சேம்பியன்ஷிப், 2010ல் ஃபார்முலா 2 சேம்பியன்ஷிப் உள்ளிட சில போட்டிகளில் போட்டியிட்டார்.  இதைத் தொடர்ந்து எந்த கார் ரேசிலும் பங்கேற்காமல் இருந்த அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2025ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஜிடி4  சாம்பியன்ஷிப் பிரிவில் பங்கேற்க திட்டமிட்டுள்ளாதாக தி ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா சமீபத்தில் தெரிவித்திருந்தது. மேலும் அவரது நண்பரும் கார் பந்தய வீரருமான நரேன் கார்த்திகேயனும் அஜித் பங்கேற்க திட்டமிட்டு வருவதாக தெரிவித்திருந்தார். 

இதையடுத்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, விரைவில் நடக்கவிருக்கும் யுரோப்பியன் ரேஸிங்கில் அஜித் பங்கேற்கவுள்ளதாகவும் அதற்காக துபாயில் கார் ஓட்டும் சோதனை பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் இது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் அஜித் புதிய கார் ரேஸ் அணியை தற்போது தொடங்கியுள்ளதாக சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற அணி பெயரில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பேபியன் என்பவர் ஐரோப்பியா சீரிஸ் 992 ஜிடி3 கப் பிரிவில் பங்கேற்பார் என்று கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்