Skip to main content

“அஜித் எளிமையான பண்புள்ள மனிதர்” – விஸ்வாசம் பாடலாசிரியர் அருண்பாரதி பகிரும் சுவாரசியம்

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

“Ajith is a simple gentleman” – Lyricist Arunbharathi

 

நக்கீரன் ஸ்டுடியோ யூடியூப் சேனலில் வரும் பாட்டுக் கதை தொடரில் பாடலாசிரியர் அருண்பாரதி தனது விஸ்வாசம் படத்தின் பாடல் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...

 

விஸ்வாசம் படத்தின் பாடல் எதிர்பார்ப்பு அனுபவங்கள் பற்றி...

என்னுடைய பாட்டு பயண அனுபவத்தில் விஸ்வாசம் படம் பெரிய அனுபவம். 2017 முதல்  பாடல்கள் எழுதினாலும்  2019 பொங்கலுக்கு வந்த  விஸ்வாசம் படம் மூலம் தான் என் மேல் கேமரா வெளிச்சம் பட ஆரம்பித்தது. அதற்குக் காரணம் மிகப்பெரிய அளவில் சினிமாத்துறையில் உள்ள அஜித் சாருக்கு பாடல் எழுதும் போது அதற்கான எதிர்பார்ப்பு இயல்பாகவே அதிகரித்தது. அதே போன்ற கவனிப்பு என் மேல் எப்படி உருவாகும் என்று தெரியவில்லை. நான் அந்த அளவிற்கு சமூக வலைதளத்தில் அப்போது ஆக்டிவாக இருந்தது இல்லை.


ஒரு முறை சிவா சாருடன் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்போது நான் எழுதிய ''புதிய பானையில் பழைய சோறு'' என்ற புத்தகத்தை கொடுத்தேன்.  அவருடைய படங்களான  வீரம், விவேகம், வேதாளம் போன்ற படங்கள் பிடிக்கும் என்பதால் தான்,  மரியாதை நிமித்தமாக தான் என்னுடைய புத்தகத்தை கொடுத்தேன். விஸ்வாசம் படத்தில் வாய்ப்பு வேண்டும் என்று எல்லாம் கொடுக்கவில்லை. வாய்ப்பு தருவார் என்று நினைத்தேன். ஆனால் விஸ்வாசம் படத்திலேயே வாய்ப்பு தருவார் என்றெல்லாம் நினைக்கவில்லை. என்னுடைய புத்தகத்தை படித்த சிவா சாருக்கு எனக்கு வாய்ப்பு தர வேண்டும் எனத் தோன்றி இருக்கு. இரண்டாவதாக விஸ்வாசம் படம் மதுரை கதைக்களம் கொண்டது என்பதெல்லாம் தெரியவில்லை. நான் எழுதிய புத்தகமும் மதுரை, தேனி வட்டார கிராமிய வாழ்க்கை அடிப்படையாக இருந்ததும் ஒரு காரணமாக இருந்தது. தங்கமா வைரமா பாடல், ஜிஎஸ்டி பாடல், ஓடாதே ஓடாதே பாடல்  எல்லாம் பொதுவான பாடல்களாக இருந்தது. மிகப்பெரிய அளவில் வெளிச்சம் கொடுத்தது விஸ்வாசம் படத்தின் பாடல்கள் தான். 

 

எனக்கு கொடுத்த  பாடலின் கதைக்களம் அருணாச்சலம் படத்தில் 'மாத்தாடு மாத்தாடு மல்லிகே' என்ற ஒரு பாட்டு வரும். அந்தப் பாடல் விடுகதை சாயலில் இருக்குமாறு குடுத்தாரு. அந்தப் பாடலில் ரஜினி, செந்தில், மனோரமா என எல்லா நடிகர்களும் வருவார்கள். அதே போன்று இந்தப் பாடலிலும் அஜித், நயன்தாரா, ரோபோ ஷங்கர், மதுமிதா, தம்பி ராமையா என எல்லா நடிகர்களும் வருவது மாதிரி இருந்தது. என்னுடைய பாடலும் விடுகதை சாயலில் இருப்பது எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. அதனால் அதை கொஞ்சமாக மாற்றி கிராமத்து வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட கிண்டலான நக்கல் நிறைந்த தொனியில் அமைத்தேன். ஒரு பையனும் ஒரு பொண்ணும் நக்கல், கிண்டல் செய்யும்  தொனியில் எழுதினேன். கிராமத்து உறவு முறைகளில் உள்ள வாழ்வியல் முறைகளை கிண்டலாக வச்சுத்தான் டங்கா  டங்கானு எழுதினேன்.

 

பருத்திவீரன் படத்தில் கூட ஒரு பாட்டு வரும் டங்கா டுங்கா தவுட்டுக்காரினு ஒரு பாட்டு வரும். அதே மாதிரி நானும் டங்கா என்ற வார்த்தையை வச்சு ஒரு சின்ன ஊடலும், விரசலும் கொண்ட இரட்டை அர்த்தம் இல்லாத வகையில் எழுதினேன். தோழுவ கம்பு என்ற வார்த்தை எல்லாம் இதுவரை தமிழ் சினிமாவில் இடம்பெறாத வார்த்தை. இந்த வட்டார வழக்கு வார்த்தைகள் எல்லாம் சிவா சாருக்கும் இமான் சாருக்கும் ரொம்ப பிடிச்சு இருந்தது. அது போன்று நிறைய வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். அதனால் ரொம்ப சந்தோஷப்பட்டேன். இது போன்று நான்கு, ஐந்து வகைகளில் பாடலை எழுதினேன்  சிவா சாரிடம் நிஜமாகவே நான் இந்த படத்திற்கு பாடல் எழுகிறேனானு கேட்டேன். உங்களுக்கு நல்ல திறமை இருக்கு. அதை நான் பயன்படுத்திக்கிறேன்னு சொன்னாரு. இந்த வெற்றி, சூழல் எல்லாம் என்னால் செய்யப்பட்டது இல்லை. இது எல்லாம் இறைவன் செயல் என்ற நம்பிக்கை கொண்டவர் சிவா சார். ரொம்ப தன்னடக்கம் கொண்டவர். இந்த நேரத்தில் நீங்க என்னுடன் சேர்வது எல்லாம் இறைவன் சித்தம் என்ற நம்பிக்கை கொண்டவர்.

 

பின்பு பாட்டை அப்படியே இமான் சாருக்கு அனுப்பிட்டாங்க. பின்பு சிவா சாரிடம் இருந்து பதினைந்து, இருபது நாட்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. ஒரு நாள் அழைப்பு வந்தது. பின்பு அவரை சந்தித்தேன். அவர் பாடலை ப்ளூடூத் வழியாகக் கேட்க வைத்தார். அந்தப் பாடலுக்கு இமான் சார் எவ்வித வார்த்தை மாற்றமும் இல்லாமல் இசையமைத்து இருந்தார். பாடலை பார்த்து விட்டு எந்த மாற்றமும் செய்யவில்லை, க், ங், ஞ்-னு ஒரு எழுத்து கூட மாற்றவில்லை. இதே போன்று ‘நெல்லுக்கட்டு சுமக்கும் புள்ள.. நெஞ்சைக் கட்டி இழுக்கும் புள்ள.. சுத்தி யாரும் இல்ல புள்ள.. தல்லாலே.. தல்லாலே.. சட்ட மேல சட்ட போட்டு சரிகை குள்ள.. கோட்டாறு தோப்புக்குள்ள.. மோட்டாரு ரூமுக்குள்ள.. காட்டாறு போல வரேன்..  ரொம்ப பிடிச்சு இருக்கு சார்னு சிவா சார் சொன்னார். இந்தப் படத்துல நீங்க ரெண்டு பாட்டு எழுதி இருக்கீங்கனு சொன்னாரு. மனம் திறந்து பாராட்டினார். வைரமுத்து சார் அளவுக்கு எழுதி இருக்கீங்கனு பாராட்டினார். 

 

அஜித் சார்க்காக எழுதட்டுமானு நான் கேட்டேன். அதற்கு அவர் கிராமத்துக் கதையை அடிப்படையாக வைத்து எழுதுங்கள். அஜித் சாரை கதைக்களத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார். சிவா சாரிடம் தன்னடக்கம் அதிகம். வளரும் போது உற்சாகப்படுத்தி கைத்தூக்கி விடும் பண்பு கொண்டவர் சிவா சார். ஒரு பாட்டு எழுதச் சென்று இரண்டு பாட்டு அமைந்தது. அஜித் சார் பாட்டு விஷயத்தில் எனக்கு தெரிய அவர் எதுவும் தலையிடவில்லை.

 

மண் வாசனையுடன் கூடிய பாடல் வார்த்தைகளை எப்படி பிடிக்கிறீர்கள்?

எல்லாமே நம்முடைய விளையாட்டுகள், மக்களின் வாழ்வியலில் இருந்து தான் எடுத்தேன். டங்கா, தள்ளே தள்ளே, தத்தகா புத்தகா தவளசோரு,  தன்னானே நன்னானே எல்லாமே மக்களின் வாழ்க்கையில் இருந்து தான் எடுத்தது. நான் வேறு எங்கு இருந்தும் இந்த வார்த்தைகளை எடுக்கவில்லை. எல்லா வரிகளும் மக்களிடம் உள்ள வாழ்வியல் வார்த்தைகளில் இருந்து தான் எடுத்து.

 

அஜித் உடனான சந்திப்பு பற்றி...

அது ஒரு அற்புதமான அனுபவம். அவரை முதன்முதலில் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் தான் சந்தித்தேன். ஒரு மனிதர் எளிமையாக இருப்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம். நம்மால் யாருக்கும் எந்தக் கெடுதலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அஜித் சார் உறுதியாக இருக்கிறார். உயர்ந்த இடத்திற்கு சென்ற பின்பும் எளிமையாக இருப்பது ரத்தத்திலேயே உள்ள அத்தனை நல்ல குணங்களும் அஜித் சாரிடம் பார்த்தேன். சிவா சார் தான் அஜித் சாரிடம் அழைத்துச் சென்று டங்கா  டங்கா பாடலை எழுதியவர் இவர் தான் என்று என்னை அறிமுகம் செய்து வைத்தார். உடனே, ரொம்ப நல்லா பாடல் எழுதி இருக்கீங்க சார்னு சொல்லிட்டு அவர் நன்றி சொன்னார். நான் உங்களுக்கு பாடல் எழுதியதற்கு நான்தான் நன்றி சொல்லணும் சார் காலம் முழுவதும் என்றேன். நம் ஒரு நாள் சந்திப்போம் என்றார். நான் ஒரு இரண்டு மணி நேரம் இருந்து பார்த்தேன். இவ்வளவு எளிமையாக இருக்க முடியுமானு பார்த்தேன். மிகவும் பண்புள்ள மனிதர்கள் எல்லாம் அங்கு ஒன்றாக இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உதயநிதி அந்த படத்தில் நடிக்கிறாருன்னே தெரியாது - பாடலாசிரியர்  விக்னேஷ்

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

 Vignesh Lyricyst Interview

 

தன்னுடைய திரையுலக அனுபவங்களை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

வாலி சாரின் பாடல்கள் எந்தக் காலத்துக்கும் பொருந்தும் வகையில் இருக்கும். கடைசிவரை தன்னை அப்டேட்டாக வைத்திருந்தவர் வாலி சார். நாமும் அவுட்டேட்டாக  ஆகிவிடக் கூடாது என்கிற பயத்தை எனக்கு ஏற்படுத்திக்கொண்டே இருப்பவர் அவர். மிஸ்ஸி சிப்பி பாடலை வாலி சார் எழுதியது ஆச்சரியம். யாரும் முகம் சுளிக்காத வகையில் கிளாமரான அந்தப் பாடலை அவர் எழுதியிருப்பார். எனக்கு அவர் எழுதியதில் மிகவும் பிடித்த இன்னொரு பாடல் முக்காலா முக்காபுலா. எப்படி அதுபோன்ற வார்த்தைகளைப் பிடிக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கும்.

 

முதலில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். என்னோடு படித்த பெண்கள் கூட அவற்றைத் திரும்பிப் பார்க்கவில்லை. என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய ஆல்பம் பாட்டுக்காக என்னைப் பாடல் எழுதச் சொன்னார். அதுதான் நான் எழுதிய முதல் பாடல். அவருக்கு நான் எப்போதும் நன்றி சொல்ல வேண்டும். அதன்பிறகு பலருடன் தொடர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். கண்ணை வீசி பாடலில் நான் நினைத்த வரிகளை விட எதிர்பார்க்காத வரிகளுக்கு அதிக பாராட்டுகள் கிடைத்தது. நான் அதிகம் எதிர்பார்த்த சில பாடல்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. 

 

அடிபொலி பாடல் எனக்கு நிறைய சினிமா வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்தது. கண்ணை நம்பாதே படத்துக்குப் பாடல் எழுதும்போது அது உதயநிதி ஸ்டாலின் சார் நடித்த படம் என்பதே எனக்குத் தெரியாது. அதனால் பொதுவான ஒரு பாடலாகத் தான் அதை எழுதினேன். அதன் பிறகு உதயநிதி சாரின் படத்துக்காகத் தான் அந்தப் பாடல் என்று தெரிந்தவுடன் சர்ப்ரைஸாக இருந்தது. தமிழ் இலக்கியங்களில் நாம் இன்னும் சினிமாவில் பயன்படுத்தாத வார்த்தைகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றைத் தேடித் தேடிப் பயன்படுத்துகிறேன். அது புதுமையையும் தருகிறது.


 

Next Story

விக்ரம் பட பிரபலம் மீது இளம்பெண் கொடுத்த புகார் - காவல் நிலையத்தில் விசாரணை

Published on 14/02/2023 | Edited on 14/02/2023

 

vishnu edavan case Transfer to other police station

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அனைத்து படங்களிலும் இணை இயக்குநராக பணியாற்றியவர் விஷ்ணு இடவன். மேலும், பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மாஸ்டர் படத்தில் 'பொளக்கட்டும் பற பற', விக்ரம் படத்தில் 'போர் கண்ட சிங்கம்', 'நாயகன் மீண்டும்' உள்ளிட்ட பாடல்களை எழுதியுள்ளார். 

 

இந்நிலையில், விஷ்ணு இடவன் மீது இளம்பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்துகொள்வதாகத் தெரிவித்து கர்ப்பமானதை தொடர்ந்து தற்போது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறி சென்னை திருமங்கலத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணும் விஷ்ணு இடவனும் காதலித்து வந்துள்ளதாகவும் அப்போது அந்த பெண் கர்ப்பமான நிலையில் இருவீட்டாரும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

ஆனால், திருமணத்திற்கு விஷ்ணு இடவன் மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்போது அந்தப் பெண்ணின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார் விஷ்ணு இடவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், இருதரப்பிலும் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.