தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார் தற்போது வெளிநாடுகளில் ரேஸில் பிசியாக இருந்து வருகிறார். குறிப்பாக "அஜித்குமார் ரேஸிங்" என்ற பந்தைய நிறுவனத்தைத் தொடங்கி துபாய் பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தயத்தில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார். தொடர்ந்து வெளிநாடுகளில், ரேஸில் பிசியாக இருந்து வரும் அஜித்தை, திரை பிரபலங்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக மாதவன், சிம்பு, பிரசன்னா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், வெங்கட் பிரபு போன்றோர் அஜித்தை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, அபுதாபி, பார்சிலோனா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் தனது அணியினருடன் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், அபுதாபியில் உள்ள யாஸ் மெரினா சர்கியூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தின் போது, அஜித் குமார் ரசிகர்களைக் கண்டிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ரசிகர்களிடம் "தயவு செய்து சரியான முறையில் நடந்து கொள்ளுங்கள். இது தியேட்டர் கிடையாது. அதைப் புரிந்து கொள்ளுங்கள்" என்று கடிந்து கொண்டார்.
அதாவது, இந்த ரேஸ் நடக்கும் இடத்திற்கு வந்த ரசிகர்கள் அஜித்தைப் பார்த்தவுடன் கத்த தொடங்கியுள்ளனர். மேலும் அவரை சந்திப்பதற்காக, முண்டியடித்துக் கொண்டு சென்றுள்ளனர். இதனால் நெருக்கடி நிலைக்க ஆளானார் அஜித். இந்த சங்கடமான சூழ்நிலையில், ரசிகர்கள் திரையரங்கில் நடந்துகொள்வது போல் இங்கும் நடந்து கொள்வதைக் கண்டு வேதனை அடைந்தார். அதனால், இதுபோல் இந்த இடத்தில் நடந்துகொள்ளக் கூடாது என அவர்களைக் கண்டித்தார். இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இந்த வீடியோவை பார்த்த பலரும், எப்போதும் நடிகர்கள் உட்படப் பல பிரபலங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதமாக ரசிகர்கள் நடந்து கொள்கிறார்கள். இது அவர்களது இயல்பு வாழ்க்கையிலும், பல நேரங்களில் சங்கடங்களையும், பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன. இதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow Us