நடிகரும் ரேஸருமான அஜித்குமார் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணி மூலம் துபாய் தொடங்கி போர்ச்சுக்கல் வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் சில விபத்துகளையும் சந்தித்தார். ஆனால் பெரிதாக காயம் ஏதும் இல்லாமல் தப்பித்தார். முதலில் துபாயில் நடந்த 24ஹெச் சீரிஸில் மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தினார். அதன் பிறகு நடந்த போட்டிகளில் கவனிக்கத்தக்க இடங்களை பிடித்திருந்தார். 

Advertisment

இந்த நிலையில் ஸ்பெயினில் நடக்கும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்கிறார். முதலில் கடந்த 27 - 28ஆம் தேதி நடந்த 24ஹெச் போட்டியில் கலந்து கொண்டார். இதில் இவரது அணி மூன்றாவது இடம் பிடித்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பு தனது குடும்பத்துடன் அஜித் எடுத்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றது. இப்போட்டியை அடுத்து வரும் நாளை மற்றும் நாளை மறுநாளான 30 - அக்டோபர் 1 ஆகிய தேதி ‘எல்எம்பி3 டெஸ்ட்’( (LMP3 Test), அக்டோபர் 6 அன்று மகேந்திரா ஃபார்முல ஈ டெஸ்ட்(Mahindra Formula E Test), அக்டோபர் 11 - 12 ஆகிய தேதிகளில் ஜிடி4 யுரோப்பின் சீரிஸ்(GT4 European Series) ஆகிய போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளார். 

Advertisment

இதனிடையே பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ரேஸிற்காக குடும்பத்தை தியாகம் செய்திருப்பதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “ஷாலினி நிறைய விஷயங்களை கையாள்கிறார். அவருடைய சப்போர்ட் இல்லையென்றால் என்னால் இதை செய்திருக்க முடியாது. குழந்தைகள் என்னை பார்ப்பது அரிதாகிவிட்டது. அவர்கள் என்னை மிஸ் செய்வது போலவே நானும் அவர்களை மிஸ் செய்கிறேன். இது போன்ற விஷயங்களை இதுவரை நான் பார்த்ததில்லை. ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தை ஆழமாக நேசிக்கும்போது தியாகங்களை செய்ய வேண்டும்” என்றார். 

பின்பு அவரது மகனின் எதிர்காலம் குறித்தும் பேசியிருக்கிறார். “என் மகனும் கார் ரேஸை விரும்புகிறான். ஆரம்பக்கட்ட பயிற்சியை தொடங்கி விட்டான். ஆனால் இன்னும் சீரியஸான லெவலுக்கு போகவில்லை. அவன் உண்மையிலேயே ரேஸில் தான் போக வேண்டும் என முடிவு எடுக்க கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்கிறேன். சினிமாவாக இருந்தாலும் சரி ரேஸாக இருந்தாலும் சரி என்னுடைய கருத்துகளை அவன் மேல் திணிக்க மாட்டேன். சொந்த முயற்சியில் அவன் வளர வேண்டும், அதற்கு தேவையான எல்லா சப்போர்ட்டையும் நான் கொடுப்பேன்” என்றார். முன்னதாக அஜித்தின் மகன் ஆத்விக், ரேஸ் டிராக்கில் பயிற்சி பெற்றான், அப்போது அஜித் ஆத்விக்குக்கு அறிவுரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.   

Advertisment