Skip to main content

கலைஞருக்குத் தும்பைப்பூ, ஜெ.க்கு செல்லப் பிள்ளை...?  அஜித்தும் அரசியலும்! 

Published on 22/01/2019 | Edited on 22/01/2019
ajith with kalaignar


எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று அஜித்திடம் இருந்து பத்திரிகையாளர்களுக்கு ஒரு அறிக்கை... அதை வாசிப்பதற்கு முன்பு அது உண்மையானதுதானா என்று உறுதிப்படுத்துவதில்தான் நாமும் கவனம் செலுத்தினோம். அந்த அளவுக்கு வெளிஉலகத்திலிருந்து விலகியே இருக்கிறார் அஜித். உண்மையான அறிக்கைதான் அது. அதுவும் திருப்பூரில் அஜித் ரசிகர்கள் நூறு பேர் பாஜகவில் இணைந்த விழாவில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் அஜித்தை பாராட்டிப் பேசிய அடுத்த நாளே வெளிவந்திருக்கும் அறிக்கை. தான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் என்ற அடையாளத்தை விரும்பவில்லை என்றும் எந்த அரசியல் கட்சி சார்ந்த பேனர்களிலும் தன் பெயர் இடம் பெறுவதை தான் விரும்பவில்லை என்பதை உறுதியாகக் கூறியிருக்கிறார் அஜித். இது பாஜகவுக்கான அஜித்தின் பதிலடி என்று பாஜக எதிர்ப்பு நிலையில் உள்ளவர்கள் கொண்டாடுகின்றனர். இதற்கு முன்பு தமிழகத்தின் முக்கிய கட்சிகள், தலைவர்களுடன் அஜித்தின் தொடர்பு எவ்வாறு இருந்துள்ளது என்பதையும் அஜித், தன் மன்றங்களைக் கலைத்த பின்னணியையும் பார்ப்போம்.  

2011 ஆம் ஆண்டு... தனது பிறந்த நாளுக்கு இரண்டு நாட்கள் முன், 29 ஏப்ரல் அன்று நடிகர் அஜித் தன் ரசிகர்களுக்குக் கொடுத்த பிறந்த நாள் விருந்து, இந்த அறிவிப்பு. 'விரும்பத்தகாத சில விஷயங்கள் நடப்பதால், மாநிலம் முழுவதும் இருந்த தன் ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாகவும்,  நலத்திட்டங்கள் செய்வதற்கு நல்ல மனம் போதும், அமைப்பு தேவையில்லை' எனவும் கூறியிருந்தார் அஜித். அவரின் இந்த அறிவிப்பு, திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பிற நடிகர்களின் ரசிகர்கள் மத்தியிலும், விவாதங்களைத் துவக்கியது. அதுவரை, 'கிங் ஆஃப் ஓப்பனிங்' என்று அழைக்கப்பட்டவர் அஜித். அது அவரது ஐம்பதாவது படமான மங்காத்தா வெளிவர இருந்த நேரம். ரசிகர் மன்றங்களைக் கலைத்ததால் அந்தப் படத்திற்கு வழக்கமான ஓப்பனிங் இருக்காதென்றும், ரசிகர்கள் கோபமாய் இருப்பார்கள் என்றும் பேசப்பட்டது. அஜித் அமைதியாகவே இருந்தார். வெளிவந்தது மங்காத்தா. மிகப்பெரிய ஓப்பனிங் தந்தனர் அஜித் ரசிகர்கள்.

 
நடிகர்கள் மன்றங்களை வைத்திருப்பது  நற்பணிகளுக்காக மட்டுமில்லை, தங்கள் மார்க்கெட்டுக்காகவும்தான். அவற்றைக் காட்டி, பின்னாளில் அரசியலில் நுழைந்த நடிகர்கள் பலர். மன்றங்கள் இருந்த போதும் கூட, வருடம்தோறும் ரசிகர் மன்ற கூட்டங்களோ, சந்திப்புகளோ நடத்தும் வழக்கமில்லை அவருக்கு. மன்றங்களைக் கலைத்ததன் மூலம், ரசிகர்களை எந்த விதத்திலும் பயன்படுத்த மாட்டேன் என்று நிரூபித்தார். ரசிகர்களும் அவரைப் புரிந்து கொண்டு அமைப்பில்லாமலேயே தொடர்ந்தனர். 
 

கலைஞருக்கும் அஜித்திற்குமான உறவு கிட்டத்தட்ட அஜித்தின் திருமணத்தில் ஆரம்பித்தது. இவரது திருமண வரவேற்பில்   ஜெயலலிதாவும் கலந்துகொண்டார். கலைஞரும் நேரில் சென்று அஜித்தை வாழ்த்தினார். பின்னர் அஜித் திரையுலகில் வளர்ந்தபோது ஓரிரு முறை ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக அஜித்குமார் சந்தித்தார்.
 

திரைக்கலைஞர்களுக்கு நிலம் ஒதுக்கிய கலைஞரை பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த 'பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழா' நிகழ்ச்சியில் பங்கேற்ற அஜித்குமார் மேடையில் பேசியபோது... '60 ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழகத்திற்காக உழைத்து கொண்டிருக்கும் தலைவரே' என வாழ்த்திப் பேச ஆரம்பித்து பின்னர், 'பொது நிகழ்ச்சிகளுக்கு எங்களைப் போன்ற நடிகர்களை மிரட்டி வரவைக்கின்றனர். எங்களுக்கு அரசியல் வேண்டாம். யாரும் எங்களை கட்டாயப்படுத்த கூடாது என்று நீங்கள் தான் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்' என்று பேசினார். அனைவரும் கலைஞரை பாராட்டிக்கொண்டிருந்த வேளையில் அஜித் இப்படி பேசியது, ஒரு நிமிடம் அரங்கமே அதிர்ச்சியில் நின்றது. ரஜினிகாந்த் அஜித்தின் இந்தப் பேச்சுக்கு எழுந்து நின்று கைதட்டினார். அஜித் இப்படி பேசியதற்கு ஒரு சேர எதிர்ப்புகளும், ஆதரவும் கிளம்பின. ஒரு முதலமைச்சருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அஜித் இப்படி பேசியதற்கு, 'அஜித் ஜெயலலிதா விசுவாசி' என்றும், அவர் மேல் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், கைது கூட செய்யப்படலாம் என்ற அளவுக்கு பேசிக்கொண்டனர்.
 

ajith jeyalalitha


பின்னர் இந்த கடும் கொந்தளிப்பிற்கு மத்தியில் பிரச்சனை குறித்து விளக்கமளிக்க ரஜினிகாந்தும், அஜித்குமாரும் கலைஞரை நேரில் சென்று சந்தித்தனர். அந்த சந்திப்பிற்குப் பிறகு கலைஞர் இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்... 'எனக்கு திரையுலகம் எடுத்த பாராட்டுவிழாவில் கலைஞர் பெருந்தகை அமிதாப் பச்சன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் அள்ளித்தெளித்த அன்பு மலர்களினிடையே அஜித் என்ற தும்பை மலரும் என் மேல் விழுந்தது. அஜித் ஒரு தும்பை மலர், அது மாசற்ற மலர் எனினும் எதிராக விழுந்த மலரோ என்று ஐயப்பாட்டை எழுப்பிய பத்திரிகைகள் அதை பூதாகரமாக்கி விட்டனர். இதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளில் திரையுலகில் ஏற்பட்ட கசப்பு பற்றி அஜித் விளக்கமளித்தார், கலையுலகில் கலகம் ஏற்படுத்தலாம் என காத்திருந்தோருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது' என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சமீபத்தில் கலைஞர் உடல்நலம் குன்றியிருந்தபோது மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலினிடம் நலம் விசாரித்த அஜித் ராஜாஜி மண்டபத்தில் கலைஞரின் உடலுக்கு இறுதியஞ்சலி செலுத்தினார். 
 

அதற்கு முன்பு ஜெயலலிதா உடல்நிலை மோசமாகி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போதும் மறைந்த பிறகும் ஜெயலலிதா தனது அரசியல் வாரிசு அஜித்தான் என்று எழுதிவைத்திருப்பதாகவும் அதிமுக அடுத்து அஜித் தலைமையில்தான் என்றும் சிலர் பேசிக்கொண்டனர். ஆனால், எந்தப் பக்கமிருந்தும் அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து செய்திகள் வரவில்லை. தமிழ் ஊடகங்களை விட மலையாள, ஆங்கில நாளிதழ்களில் இந்த செய்தி அதிகம் வளம் வந்தது. ஆனால், அஜித் இதுகுறித்து சிறிதும் வாய்திறக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு அஜித் மேல் அன்பு உண்டு. 2011 இல் அதிமுக ஆட்சி அமைந்த போது, திமுக சார்ந்த நிறுவனங்கள் தயாரித்த படங்கள் கெடுபிடிகளை சந்தித்த போது. தயாநிதி அழகிரி தயாரித்த 'மங்காத்தா' மட்டும் சுமூகமாக வெளிவந்தது இதற்கு சான்று. ஜெயலலிதா மரணத்தின்போது வெளிநாட்டில் இருந்த் அஜித் பின்னர் சென்னை வந்து விமான நிலையத்திலிருந்து நேரடியாக ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். 
 

இப்படி அஜித் ஒதுங்கியிருக்கும் போதும் அவ்வப்போது அரசியலில் அவரது பெயர் அடிபடும். வெகு சில சமயங்களில்தான் அஜித் பதில் கொடுப்பார். அப்படி ஒரு தருணம்தான் நேற்று நிகழ்ந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரிகள் பின்னாலேயே இருந்துள்ளார்கள்” - உதயநிதி ஸ்டாலின்

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

"The enemies were behind" Udayanidhi Stalin

 

“ஜெயலலிதா கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்றார். ஆனால் அவருக்குப் பின்னாலேயே எதிரிகள் இருந்துள்ளனர்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திமுக சட்டப்பிரிவு சார்பில் ஒன்றியமும் மாநிலமும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இரண்டு மாதங்களுக்கு முன் இங்கிருக்கும் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் என்றார். தமிழ்நாடு என இருக்க வேண்டாம். தமிழகம் என மாற்றிக் கொள்ளுங்கள் என்றார். தற்போது திமுக ஆட்சியில் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி ஆட்சியோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியோ இருந்திருந்தால் தற்போது தமிழ்நாட்டின் பெயரையே மாற்றி இருப்பார்கள். அதை எதிர்த்து குரல் கொடுத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.

 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவில் என்ன நிலைமை இருந்தது. அதிகாரக் குவியல். கண்ணுக்கெட்டிய தூரம் யாரும் தெரியவில்லை என்றார். இறுதியில் அவர்களது எதிரிகள் எல்லாம் அவர்கள் பின்னாலேயே இருந்துள்ளார்கள். இதுதான் அதிகாரப் பரவலுக்குமான அதிகாரக் குவியலுக்குமான வித்தியாசம்” என்றார்.

 

 

Next Story

நடராஜன் போட்ட திட்டம்; ஜெயலலிதா, சசிகலாவை நடுங்க வைத்த செரினா..!

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

Natarajan serina case

 

2000ம் காலங்களில் அதிமுகவில் ஜெயலலிதா, சசிகலா மற்றும் நடராஜன் உள்ளிட்டோர் முக்கிய நபர்களாக இருந்தனர். அதிமுகவை தாண்டி தமிழ்நாடு அரசியலிலும் அவர்கள் பேசுபொருளாக இருந்தனர். இதற்கு இடையில் இளம் வயது பெண்ணான செரினா எப்படி இவர்களுக்குள் வருகிறார். நடராஜனுடன் எப்படி அறிமுகமாகுகிறார். நடராஜனுடன் அவர் பழகுகிறார் என்பதால் சசிகலா, ஜெயலலிதாவுக்கு ஏன் கோபம் வந்தது? என்பவற்றை எல்லாம் விளக்கி பேசினார் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன்.

 

இது குறித்து அவர் நக்கீரன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி: “ஜெயலலிதா, சசிகலா, நடராஜன் எனும் பெரும் அதிகார மையத்திற்குள் நான்காவதாக நுழைந்த பெரும் பிம்பம் செரினா. நடராஜன் அரசியலில் நேரடியாக வெளியாகவில்லை என்றாலும், டெல்லியில் நடக்கும் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் நடராஜன் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பார். அந்த அதிகார மையத்தில் இருந்த மூவரும் அச்சப்பட்டது செரினாவை பார்த்துதான். 

 

செரினாவின் தந்தை பாண்டி தேவர் இராணுவ அதிகாரியாக இருந்தவர். அவர் ஒரு இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் இராணுவ அதிகாரி என்பதால் அவருக்கு அவ்வப்பொழுது பணியிட மாறுதல் நடந்துகொண்டே இருக்கும். செரினா மிலிட்டிரி பள்ளியில் படிக்கிறார். இதனால் அவருக்கு 9 மாநில மொழிகள் தெரியும். நரசிம்மராவ், ஜெயலலிதா ஆகியோரைவிட அதிக மொழிகளைத் தெரிந்தவர். சசிகலாவுக்கு ஒன்னுமே தெரியாது. 

 

Natarajan serina case

 

இந்த செரினா மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அப்போது ஒரு பொதுநிகழ்ச்சியில் நடராஜன் செரினாவை சந்தித்து பிறகு செரினாவை அவரது உதவியாளராக நியமித்துக் கொள்கிறார். இந்த உறவு நடராஜனின் கருவை செரினா சுமக்கும் அளவிற்கு நெருக்கமானது.  செரினாவை நடராஜன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் அம்மாவிடம், “இது உன் இரண்டாவது மருமகள்” என்று சொல்கிறார். அவரும் செரினாவை ஆசிர்வாதம் செய்கிறார். 

 

இந்த தகவல் சசிகலா, ஜெயலலிதாவுக்கு தெரியவந்து ஆத்திரம் அடைகின்றனர். அவர்கள் ஆத்திரமடைய இன்னொரு காரணம், நடராஜன் செரினாவை டெல்லி அரசியலுக்கு அழைத்துச் செல்ல கன்சிராம், மாயாவதி மூலம் காய் நகர்த்தினார். மாயாவதியிடம் இவரை அறிமுகப்படுத்தி செரினாவின் பன்மொழி புலமை பற்றி சொன்னதும் மாயாவதிக்கு செரினாவை பிடித்துப்போய் செரினாவை தன் உதவியாளராக வைத்துக்கொள்வதாகவும் எம்.பி. ஆக்குவதாகவும் சொன்னார். 

 

அப்படி அவர் எம்.பி. ஆனார் என்றால், டெல்லியில் பெரும் அரசியல் லாபியை உருவாக்கிக்கொள்வார். அனைத்து மாநில அரசியல் தலைவர்களும், பிரதமர்களும் அவருக்கு பழக்கமாவார்கள். அப்படி ஒரு லாபி உருவானால் சசிகலாவின் அரசியல் காணாமல் போய்விடும். இதனால் செரினா மீது சசிகலாவுக்கு கடுங்கோபம். அதுமட்டுமல்லாமல், செரினாவுக்கு குழந்தை பிறந்தால் அது சட்டப்படி நடராஜனின் வாரிசு. இந்து திருமண சட்டப்படி முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்வது அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், இரண்டாம் மனைவிக்கு பிறக்கும் குழந்தை சட்டப்படி வாரிசுதான். அப்படி வாரிசு வந்தால், வாரிசு இல்லாத சசிகலாவின் சொத்துக்களான சசி எண்டர்பிரைசஸ், மிடாஸ், கொடநாடு உள்ளிட்ட அனைத்தும் கைமாறும். 

 

இந்த கோபங்கள் தான், செரினா 100 கிலோ கஞ்சா வழக்கில் சிக்கி எட்டு மாதங்கள் சிறையில் அடைபடக் காரணம். அதேநேரம், அவர் சிறையில் இருந்தபோது ஒரு பெண் காவலர் செரினாவை கடுமையான சித்திரவதை செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அவரின் கருவை சிறையிலேயே கலைக்கிறார். இதற்கு தமிழ்நாட்டில் இருந்த எந்த அரசியல் தலைவர்களும், “ஒரு அப்பாவி பெண்ணை ஏன் இப்படி சித்திரவதை செய்கிறீர்கள்” என அறிக்கை கூட விடவில்லை. 

 

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி கற்பக விநாயகம் செரினாவை தனியாக அவரது சேம்பருக்கு அழைத்து வாக்குமூலம் வாங்குகிறார். அப்போது, கலைஞர் மட்டுமே, “நீதிபதி அல்ல, நீதி-பாதி” என முரசொலியில் எழுதுகிறார். உடனே நீதிபதி கற்பக விநாயகம் இந்த வழக்கில் இருந்து வெளியேறுகிறார். பிறகு அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு செல்கிறது.”

 

உச்சநீதிமன்றத்தில் செரினாவின் வழக்கு என்ன ஆனது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.