அஜித்குமார் கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலே அவர் நடிகக்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கதாநாயகியாக கே.ஜி.எஃப். நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
சினிமாவை தாண்டி கார் ரேஸில் ஆர்வம் உள்ள அஜித் முன்னதாக அதிலும் கவனம் செலுத்தி வந்தார். இடையில் எந்த கார் ரேஸ் போட்டியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஜனவரி முதல் கார் ரேஸில் அதிக தீவிரம் காட்டி வருகிறார். துபாய் ஆரம்பித்து போர்ச்சுக்கல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடக்கும் போட்டியில் தனது ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணி மூலம் கலந்து கொண்டு வருகிறார். இதில் சில போட்டிகளில் வெற்றியும் கண்டுள்ளார். இப்போது பெல்ஜியமில் நடைபெறும் ஐரோப்பியா சீரிஸில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் ஜிடி4 ஐரோப்பியா சீரிஸில் மூன்றாவது சுற்றிற்கு அஜித் தயாராகி வருகிறார். இதனை அஜித்தின் ரேஸின் அணி தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து ரேஸ் சர்க்யூட்டில் அஜித் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் அஜித் மொட்டை அடித்துக் கொண்டு காணப்படுகிறார். மேலும் ரேஸூக்காக தன்னை தயார்ப்படுத்தி வருகிறார். புது லுக்கில் அவர் இடம்பெறும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.