அஜித்குமார் கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலே அவர் நடிகக்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்திலும் கே.ஜி.எஃப். நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாகவும் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

சினிமாவை தாண்டி கார் ரேஸில் ஆர்வம் உள்ள அஜித் முன்னதாக அதிலும் கவனம் செலுத்தி வந்தார். இடையில் எந்த கார் ரேஸ் போட்டியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஜனவரி முதல் கார் ரேஸில் அதிக தீவிரம் காட்டி வருகிறார். துபாய் ஆரம்பித்து போர்ச்சுக்கல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடக்கும் போட்டியில் தனது ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணி மூலம் கலந்து கொண்டு வருகிறார். இதில் சில போட்டிகளில் வெற்றியும் கண்டுள்ளார். சமீபத்தில் மொட்டை அடித்து தனது கெட்டப்பை மாற்றியிருந்தார்.

318

இந்த நிலையில் இதாலியில் நடைபெற்ற ஜிடி4 யுரோப்பியன் சீரிஸ் போட்டியில் கலந்து கொண்டார். அப்போது இரண்டாவது சுற்றில் கலந்து கொண்டு கார் ஓட்டிக்கொண்டிருந்த அஜித், விபத்தில் சிக்கினார். வளைவில் திரும்பும் போது சர்க்யூட்டின் நடுவில் பழுதாகி நின்று கொண்டிருந்த கார் மீது அஜித்தின் கார் மோதியது. இந்த விபத்தில் அஜித்துக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. பின்பு விபத்தில் ஏற்பட்ட குப்பைகளை ஊழியர்கள் அகற்றி வந்த நிலையில் அவருக்கு உதவி செய்தார். இது தொடர்பாக வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த துபாய் 24ஹெச் சீரிஸ் போட்டியில் சோதனை ஓட்டத்தின் போதும் மற்றும் ஸ்பெயினில் நடந்த போட்டியிலும் விபத்துக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment