/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/455_32.jpg)
காஷ்மீரில் ‘மினி சுவிட்ஸர்லாந்து’ என அழைக்கப்படும் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசியல் தலைவர்கள் அல்லாது உலக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இரண்டு நாடுகளும் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் திரைப் பிரபலங்களும் தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மஞ்சு வாரியர், ரவி மோகன், ஆண்ட்ரியா, ஜி.வி.பிரகாஷ், சூர்யா, காஜல் அகர்வால், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளப் பக்கம் வாயிலாக இரங்கல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது அஜித்குமார் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று குடியரசு தலைவரின் கையால் பத்ம பூஷன் விருது வாங்கிய அஜித் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய போது, “இது போன்ற நிகழ்வு இனி நடக்கக்கூடாது என நம்புகிறேன். அதற்காக பிரார்த்தனையும் செய்கிறேன். அரசாங்கம் தங்களால் முடிந்ததை செய்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனைத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அமைதியான சமூகமாக வாழ வேண்டும் என்று நாம் பிரார்த்தனை செய்வோம்.
ஆயுதப்படைகளைச் சேர்ந்த பலரை நான் சந்தித்தேன். அவர்களின் தியாகங்களை வணங்குகிறேன். அவர்கள் மிகவும் கடினமாக உழைப்பதால் தான் நாம் அனைவரும் நிம்மதியாக தூங்க முடிகிறது. அவர்களும் அவர்களது குடும்பத்தினருடன் ஒரு அழகான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன். அவர்கள் நமது எல்லைகளைப் பாதுகாக்க மிகவும் அயராது உழைக்கிறார்கள், குறைந்தபட்சம் அவர்களின் மரியாதைக்காக, நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் மதித்து, அனைத்து மதம் மற்றும் சாதியையும் மதித்து சண்டை போட்டுக் கொள்ளாமல் அமைதியான சமூகமாக இருப்போம்” என்றுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)