நடிகரும் ரேஸருமான அஜித்குமார் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற அணி மூலம் துபாய் தொடங்கி போர்ச்சுக்கல் வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் சில விபத்துகளையும் சந்தித்தார். ஆனால் பெரிதாக காயம் ஏதும் இல்லாமல் தப்பித்தார். முதலில் துபாயில் நடந்த 24ஹெச் சீரிஸில் மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தினார். அதன் பிறகு நடந்த போட்டிகளில் கவனிக்கத்தக்க இடங்களை பிடித்திருந்தார்.
இந்த நிலையில் ஸ்பெயினில் நடக்கும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்கிறார். முதலில் கடந்த 27 - 28ஆம் தேதி நடந்த 24ஹெச் போட்டியில் கலந்து கொண்டார். இதில் இவரது அணி மூன்றாவது இடம் பிடித்தது. இப்போட்டியை அடுத்து கடந்த செப்டம்பர் 30 - அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடந்த ‘எல்எம்பி3 டெஸ்ட்’ (LMP3 Test) போட்டியில் கலந்து கொண்டது. இதில் அஜித், இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் நோக்கில் ஒரு லோகோவை அவரது ஜெர்சியில் இருக்கும்படி பார்த்து கொண்டார். மேலும் இப்போட்டியில் தமிழக முன்னாள் எஃப் 1 ரேஸரான நரேன் கார்த்திகேயனும் பங்கேற்றார். இப்போட்டியை தொடர்ந்து அக்டோபர் 6 அன்று மகேந்திரா ஃபார்முல ஈ டெஸ்ட்(Mahindra Formula E Test), அக்டோபர் 11 - 12 ஆகிய தேதிகளில் ஜிடி4 யுரோப்பின் சீரிஸ்(GT4 European Series) ஆகிய போட்டிகளில் அஜித் அணி கலந்து கொள்ளவுள்ளது.
இதனிடையே பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள அஜித் தனக்கு தூக்க பிரச்சனை இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “எனக்கு விமானத்தில் பயணம் செய்யும் போதுமட்டும் தான் தூங்குவதற்கு நேரம் கிடைக்கும். மேலும் எனக்கு தூக்கப் பிரச்சனையும் இருக்கிறது. நான் தூங்குவது கடினம், அப்படியே நான் தூங்கினாலும் அதிகபட்சம் 4 மணிநேரம் தான்” என்றுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதே வேளையில் அப்பேட்டியில் அவருக்கு அடிக்கடி நடக்கும் விபத்து குறித்தும் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “எனக்கு ஏற்பட்ட விபத்துகள் குறித்து பலர் கருத்து தெரிவிப்பதை பார்த்து வருகிறேன். ஆனால் கார் ரேஸில் எந்த அணியிலும் எந்த ரேஸரிடமும் கேட்டாலும் விபத்துகள், மோட்டர் ஸ்போர்ட்ஸில் ஒரு பகுதி என சொல்வார்கள். ஆம், விபத்து பயமாகத்தான் இருக்கும். ஆனால் நாங்கள் ஓட்டும் கார்கள் விபத்துகளையும் கவனத்தில் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த கார், உருவாக்கும் போது ஓட்டுநரின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு தான் வடிவமைப்பார்கள். அதனால் மரணம் ஏற்படுவது மிகவும் அரிது. ஆனால் காரின் சக்தியையும் நம்முடைய சக்தியையும் மீறி நாம் ஓட்டும் போது விபத்துகள் ஏற்படும்” என்றார்.
அஜித்துடைய சினிமாவை பொறுத்தவரை கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இருப்பினும் படக்குழு சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.