நடிகரும் ரேஸருமான அஜித்குமார் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தனது ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி மூலம் துபாய் தொடங்கி போர்ச்சுக்கல் வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் சில விபத்துகளையும் சந்தித்தார். ஆனால் பெரிதாக காயம் ஏதும் இல்லாமல் தப்பித்தார்.
கடைசியாக ஜெர்மெனியில் கடந்த 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்ற ஜிடி4 யுரோப்பியன் சீரிஸின் நான்காவது சுற்றில் கலந்து கொண்டார். இதையடுத்து ஜெர்மெனியில் இருக்கும் அஜித், அங்கு 13 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கியுள்ளார். அந்த சிறுவன் சென்னையை சேர்ந்த ஜேடன் இமானுவேல் என்பவர். இவர் அங்கு மினி ஜிபி பிரிவில் பங்கேற்றுள்ளார். இதில் மூன்றாவது இடத்தை பிடித்த அவர், அடுத்ததாக ஸ்பெயினில் நடக்கும் உலக அளவிலான இறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ளார். அவரிடம் தற்போது அஜித் ஆட்டோகிடாப் வாங்கிம் வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
அஜித் குமார் ‘குட் பேட் அக்லி’ படத்தை தொடர்ந்து அடுத்ததாக மிண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். படம் குறித்தான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.