
நடிகர் அஜித், இயக்குனர் சிவா கூட்டணியில் வெளிவர இருக்கும் நான்காவது படம்தான் விஸ்வாசம். வருகின்ற 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது.
அஜித் தனது ரசிகர்கள் வைத்த ரசிகர் மன்றங்களை தானே முன்வந்து கலைத்தவர். அப்படி அவர் செய்தாலும், அவர் மீது கொஞ்சம் கூட பாசம் குறையாத ரசிகர்கள் இருக்கின்றனர். விஸ்வாசம் பட ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைதளத்தில் ரிலீஸானதிலிருந்து, அவரது ரசிகர்களின் கட்டுப்பாட்டில்தான் ட்விட்டர் இருக்கிறது என்று சொல்லலாம். உலகளவில் ஹேஸ்டேக், யூட்யூபில் 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் பட டிரைலர் என்று அஜித்தின் ரசிகர்கள் பாசத்தை கொடுத்து வருகிறார்கள்.
விஸ்வாசத்திற்கான டிக்கெட் புக்கிங் விருவிருப்பாக நடந்துகொண்டிருக்கும் வேளையில், நெல்லையில் அஜித்தின் ரசிகர்கள் அவருக்காக கட்டவுட், பால் அபிஷேகம் போன்ற விஷயங்களுடன் நின்றுவிடாமல் புதிதாக ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்கள். அது என்ன என்றால் பாளையங்கோட்டையில் அரசு உதவியுடன் இயங்கி வரும் பள்ளிக்கூடம் ஒன்றில், அஜித் ரசிகர்கள் 500 புத்தகங்களை கொண்ட ஒரு நூலகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த நூலகத்தில் அனைத்து விதமான நூல்களும் அடங்கியுள்ளன. இந்த நூலகத்தை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பேரன் சலீம் திறந்து வைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த நூலகத்தில் மேலும் பல நூல்களை கொண்டுவந்து சேர்க்க அஜித் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். இது போன்ற ஒரு சூப்பரான காரியத்தை அஜித் ரசிகர்கள் செய்துகொடுத்தற்காக அந்த பகுதி மக்கள் நூலகத்தை அமைத்த அஜித் ரசிகர்களை பாராட்டி வருகிறார்கள்.