'வலிமை' அப்டேட்... பிரதமர் வரை கொண்டு சென்ற அஜித் ரசிகர்கள்!

narendra modi

இயக்குநர் எச்.வினோத் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, போனி கபூர் தயாரிக்கிறார். படத்தின் பணிகள் கடந்த 2019-ஆம் ஆண்டே தொடங்கிய நிலையில், கரோனா பரவல் காரணமாகப் பாதியில் தடைப்பட்டன. கரோனா நெருக்கடி நிலை சற்று தளர்ந்ததும், மீண்டும் படத்தின் பணிகளைத் தொடங்கிய படக்குழு, தற்போது படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. பிற நடிகர்களின் படம் குறித்த அப்டேட் வெளியாகும்போது, ‘வலிமை’ அப்டேட் குறித்து தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் ரசிகர்கள் கேள்வியெழுப்பவது வழக்கம். ஆனால், தயாரிப்பு தரப்பு படம் குறித்த எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. இதனால், விரக்தியடைந்த அஜித் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, அஜித் ரசிகர்கள் சிலர், படத்திற்கு துளியும் சம்பந்தம் இல்லாத நபர்களிடமும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் குறித்துக் கேட்க ஆரம்பித்தனர். இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகும்போது, அவை பரவலான அளவில் கவனத்தை ஈர்த்ததால், அஜித் ரசிகர்கள் தற்போது இதை வாடிக்கையாக்கியுள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அஜித் ரசிகர்கள் அவரிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், நேற்று (14.02.2021) தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியிடமும் அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே போல இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து வீரர் மொய்ன் அலிமற்றும் இந்திய வீரர் அஷ்வினிடம் ‘வலிமை’ அப்டேட் கேட்ட வீடியோவும் அஜித் ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இவற்றையெல்லாம் தயாரிப்பாளர் போனி கபூர் கவனத்திற்குக் கொண்டு சென்று அவரிடம் எப்படியாவது ‘வலிமை’ அப்டேட்டை வாங்கிவிட வேண்டும் என்பதில் அஜித் ரசிகர்கள் உறுதியாக இருக்கிறார்கள் போல!

ACTOR AJITHKUMAR valimai
இதையும் படியுங்கள்
Subscribe