அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடா முயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அஜர்பைஜானில் பல மாதங்கள் இப்படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இடைவெளிக்கு பிறகு, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, இப்படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் வீடியோவை அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். அது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.
திரைப்படங்களைத்தாண்டி பைக் மற்றும் கார் பிரியரான அஜித் ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தும் நடத்தியும்வருகிறார் அஜித்.
இந்த நிலையில், அஜித்குமார் காரில் வேகமாக ஓட்டிச் செல்லும் வீடியோவை சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், சில தினங்களுக்கு முன்பு, அஜித் துபாயில் உள்ள கார் ரேஸ் மைதானத்திற்கு சென்று, பந்தய காரை அசுர வேகத்தில் ஓட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோவில், பந்தய கார் ஓட்டிச் செல்லும் அஜித், சுமார் 200 கி.மீ வேகத்தில் ஓட்டிச் செல்கிறார். மேலும், இது தொடர்பான காட்சிகள் கடந்த 21ஆம் தேதி நடந்ததாகவும் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.