
ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் கடந்த மாதம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் களம் கண்டன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வுசெய்தனர். இதனால் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 19.5 ஓவருக்கு 154 ரன்கள் எடுத்து மொத்த விக்கெட்டையும் இழந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா வீரரான டெவால்ட் பிரீவிஸ் அதிகபட்சமாக 42 ரன்களை எடுத்தார்.
பின்பு பேட் செய்த ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களிலே 155 ரன்களை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக இந்தியன் கிரிக்கெட் வீரரான இஷான் கிஷன் 44 ரன்கள் எடுத்து அணி வெற்றிக்கு உதவினார். இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டதட்ட இழந்துள்ளது.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடந்த இப்போட்டியை ஆர்வமுடன் பார்க்க ரசிகர்கள் சென்றனர். இவர்களைத் தவிர்த்து நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்துடன் இந்த போட்டியை கண்டு களித்தார். அவரை கண்டதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இவரது வருகை போட்டியின் ஹைலைட்டாக அமைந்தது. வழக்கமாக பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாத அஜித் சமீபகாலமாக ரேஸில் பங்கேற்று வருவதால் அங்கு மீடியாக்களிடம் அடிக்கடி பேசினார். அதையடுத்து முதல் முறையாக தற்போது சென்னையில் ஐ.பி.எல். போட்டியை காண சென்றிருக்கிறார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த போட்டியை சிவகார்த்திகேயனும் தனது குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார். அதோடு ஸ்ருதிஹாசனும் போட்டியை கண்டு ரசித்தார். மூவரும் ஒருவருக்கொருவர் பார்த்த போது நலம் விசாரித்து மகிழ்ந்தனர். புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.