நடிகரும் ரேஸருமான அஜித்குமார் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக கார் ரேஸில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தனது ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி மூலம் துபாய் தொடங்கி போர்ச்சுக்கல் வரை பல்வேறு நாட்டில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் சில விபத்துகளையும் சந்தித்தார். ஆனால் பெரிதாக காயம் ஏதும் இல்லாமல் தப்பித்தார்.
கடைசியாக ஜெர்மெனியில் கடந்த 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்ற ஜிடி4 யுரோப்பியன் சீரிஸின் நான்காவது சுற்றில் கலந்து கொண்டார். இந்த போட்டியின் போது இதாலியை சேர்ந்த முன்னாள் எஃப் 1 ரேஸர், ரிக்கார்டோ பாட்ரீசை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். இதையடுத்து மோட்டர் ஸ்போர்ட்ஸ் குறித்து அங்கிருந்த பார்வையாளர்கள் மத்தியில் பேசினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
வீடியோவில் அஜித் பேசியதாவது, “மோட்டர் ஸ்போர்ட்ஸ் என்பது ரொம்ப ஈஸியானது என பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் அது எவ்வளவு கஷ்டம் என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். அதனால், மோட்டர் ஸ்போர்ட்ஸை ப்ரொமோட் செய்யுங்கள். எனக்காக அல்ல. இந்தியாவுக்காக . என்றாவது ஒரு நாள் நம்மிடமும் ஒரு எஃப் 1 சாம்பியன் இருப்பார். எஃப் 1 மட்டுமல்ல, எல்லா போட்டிகளிலும் இந்திய ரேஸர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்” என்றார்.
AK’s love for Motorsports ❤️ pic.twitter.com/PXWJra0t8P
— Ajithkumar Racing (@Akracingoffl) August 31, 2025