
அஜித்குமார் கடைசியாக அதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்று ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த படத்திலும் இதற்கு முன்பு வந்த விடாமுயற்சி படத்திலும் அஜித் உடல் எடை குறைந்து காணப்பட்டார். சமீபத்தில் இவரது கலை சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கியது.
இதனிடையே கார் ரேஸில் தற்போது தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஜனவரி முதல் பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் பந்தய போட்டிகளில் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது அணி பெயரில் பங்கேற்றுவருகிறார். அதில் சில போட்டிகளில் வெற்றியும் கண்டுள்ளார். இன்னும் 13 போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த நிலையில் அஜித், தனது ஃபிட்னஸ் குறித்து ஒரு ஆங்கில இதழ் பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “நான் மீண்டும் ரேஸிற்கு போக முடிவெடுத்த போது என்னுடைய உடலை மீண்டும் ஃபிட்டாக வைக்க வேண்டும் என உணர்ந்தேன். அதனால் கடந்த ஆண்டு ஆகஸ்டு முதல் 8 மாதங்களில் 42 கிலோ எடையை குறைத்தேன். அதற்காக முறையான டயட், நீச்சல் மற்றும் சைக்கிலிங் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டேன். அப்போது நான் ஒரு டீ டோட்டலராகவும் வெஜிட்டேரியனாகவும் மாறிவிட்டேன். ரேஸுக்கு ஃபிட்டாக இருப்பது அவசியம் என்பதால் அதற்கு தேவையான அனைத்தையும் செய்தேன். அதோடு என இதயப்பூர்வமான உழைப்பையும் ஆன்மாவையும் கொடுக்க வேண்டும். அதைத்தான் இப்போது நான் செய்து வருகிறேன்” என்றுள்ளார்.