
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் செயிண்ட் மேரிஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். தனது வீட்டிலுள்ள லாக்கரில் இருந்த 60 சவரன் தங்க நகைகளைக் காணவில்லை என சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ஐஸ்வர்யா வீட்டில் 18 ஆண்டுகள் பணிபுரிந்து வந்த மந்தைவெளியைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பணிப்பெண் நகைகளைத் திருடியுள்ளது தெரியவந்தது. அவரிடமிருந்து முதற்கட்டமாக 20 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டிலிருந்து ஓட்டுநர் வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைத் திருடி விற்பனை செய்துள்ளார்.
அதன் மூலம் வந்த பணத்தை அவரது கணவர் வங்கி கணக்குக்கு பரிவர்த்தனை செய்துள்ளார். மேலும், அண்மையில் சோழிங்கநல்லூரில் 95 லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்கியுள்ளார். இதற்காக வங்கியில் கடன் வாங்கிய ஈஸ்வரி அதனை இரண்டே வருடங்களில் கட்டி முடித்துள்ளார். 6 மாதங்களுக்கு முன்பு திடீரென வேலையை விட்டு நின்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேசனை கைது செய்தனர். பின்பு ஈஸ்வரியிடமிருந்து களவு போயிருந்த 100 சவரன் தங்க நகைகளும், 30 வைர நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பத்திரம் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விசாரணையில் மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓட்டுநர் வெங்கடேசனிடம் ஈஸ்வரி ரூ. 9 லட்சம் கொடுத்துள்ளார். தனது கணவர் அங்கமுத்து பெயரில் 350 கிராம் தங்க நகைகளை வங்கி கணக்கில் அடகு வைத்துள்ளார். இதனை தற்போது மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். ஐஸ்வர்யா வீட்டில் நகை திருடியது மற்றும் அதை வைத்து சோழிங்கநல்லூரில் வீடு வாங்கியது என அனைத்தும் தனது கணவருக்கு தெரியாதபடி இருந்துள்ளார்.
அதோடு சோழிங்கநல்லூரில் வீடு வாங்கியது குறித்து அவரது வீட்டாரிடம் ஒரு நாடகத்தை நடத்தியுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீடு என்றும், ஆனால் தனது பெயரில் அதை பினாமியாக வாங்கியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் வீட்டாரிடம் கேட்டுள்ளதாக விசாரணையில் வெளிச்சமாகியுள்ளது.