Skip to main content

ஹேக் செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷின் கணக்கு - எலான் மஸ்க்கிடம் புகார்

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Aishwarya Rajesh's Twitter account hacked

 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி அளவில் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை அதிகம் தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கடைசியாக 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தில் நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதே நாளில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான 'ரன் பேபி ரன்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 

 

மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள  'ஃபர்ஹானா', 'சொப்பன சுந்தரி', 'துருவ நட்சத்திரம்', 'மோகன்தாஸ்' உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவரது பிஆர்ஓ யுவராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் அவரது கணக்கில் பதிவிடப்படுபவை குறித்து யாரும் சந்தேகிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். 

 

இதையடுத்து கணக்கு ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக ட்விட்டரின் சிஇஓ எலான் மஸ்கிடம் ஐஸ்வர்யா ராஜேஷின் சார்பாக அவரது பிஆர்ஓ புகார் அளித்துள்ளார். அந்த பதிவில், "ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. சிக்கலைத் தீர்க்க உங்கள் குழுவின் உடனடி உதவியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

கடந்த ஜனவரி மாதம் பொல்லாதவன் படத்தில் வில்லனாக நடித்த கிஷோர் தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இன்னும் அது சரி செய்யப்படவில்லை. இம்மாத தொடக்கத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார். பின்பு மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விரைவில் ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கும் மீட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

மீண்டும் கவர்ந்ததா குறட்டை செண்டிமெண்ட்? - டியர் விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
gv prakash aishwarya rajesh starring dear movie review

குறட்டையால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து கடந்த வருடம் வெளியான குட் நைட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதே கதைக்கருவை வைத்துக்கொண்டு குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை நேர்த்தியாக எடுத்துச் சொல்லும் திரைப்படமாக வெளியாகி இருக்கும் டியர் திரைப்படம் ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்த்தது? 

மலைப்பிரதேசத்தில் வசிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தூக்கத்தில் குறட்டை விடும் வியாதி இருக்கிறது. இதனால் அவருக்கு மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதற்கிடையே டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் ஜிவி பிரகாஷ் தன் அம்மா, அண்ணன் வற்புறுத்தலின் பேரில் ஐஸ்வர்யா ராஜேஷை மணம் முடிக்கிறார். சிறிது சத்தம் கேட்டாலும் தூக்கத்தில் எழுந்து கொள்ளும் பழக்கம் இருக்கும் ஜிவி பிரகாஷுக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் குறட்டை மிகப்பெரிய இடியாக வாழ்க்கையில் வந்து விழுகிறது. இதனால் இருவருக்குள்ளும் பிளவு ஏற்படுகிறது. இந்தப் பிளவு நாளடைவில் விவாகரத்து வரை சென்று விட இதன் பிறகு இருவரும் விவாகரத்து பெற்றார்களா? அல்லது மீண்டும் இணைந்தார்களா? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

gv prakash aishwarya rajesh starring dear movie review

நாம் இதற்கு முன் இதே போன்ற ஒரு கதையை பார்த்து இருப்பதால் கதையில் பெரிய சுவாரசியம் இருப்பதாக தோன்ற மனம் மறுக்கிறது. அதேபோல் இதற்கு முன் வெளியான படத்தில் நாயகனுக்கு குறட்டை பிரச்சனை, இந்த படத்தில் நாயகிக்கு குறட்டை பிரச்சனை. மற்றபடி கதைக்கும் திரைக்கதைக்கும் வேற எந்த சம்பந்தமும் இல்லாமல் இந்த படம் வேறு ஒரு டிராக்கில் பயணிக்கிறது. வெறும் ஒரே ஒரு குறட்டையை வைத்துக் கொண்டு 2:30 மணி நேரம் படத்தை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா என்றால் சற்று சந்தேகமே! ஒரு புதுமண தம்பதிக்கு திருமணம் நடந்த பிறகு அவர்கள் வெறும் தூக்கத்திற்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? அதேபோல் ஒரு குறட்டை என்று வரும் பட்சத்தில் அதிலிருந்து விடுபடும் நோக்கில் காதில் பஞ்சு வைத்துக் கொள்ளலாமே? போன்ற கேள்விகள் படம் பார்ப்பவர்கள் மனதில் எழ செய்வதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல் படம் ஆரம்பித்து ஒரு நகைச்சுவை படமாகவும் இல்லாமல், ஒரு சீரியசான படமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவே பயணிப்பது சற்றே அயற்சியை கொடுத்து இருக்கிறது. அதே போல் எந்த ஒரு இடத்திலும் பெரிதாக திருப்பங்கள் இல்லாமல் படம் பிளாட்டாக செல்வது சுவாரசியத்தை குறைத்து இருக்கிறது.

ஜீவிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கெமிஸ்ட்ரியும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. படத்தின் டைட்டிலுக்கு கொடுத்த கிரியேட்டிவிட்டியின் முக்கியத்துவத்தை இயக்குநர் ரவிச்சந்திரன் திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இந்தப் படம் நன்றாக பேசப்பட்டிருக்கும். வழக்கமான நாயகனாக வந்து செல்கிறார் நாயகன் ஜி.வி பிரகாஷ். அவருடைய தோற்றத்திலும் நடிப்பிலும் எந்த ஒரு மாற்றமும் இன்றி முந்தைய படங்களில் என்ன செய்தாரோ அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். நடிக்க நன்றாக ஸ்கோப் இருந்தும் அதை சரியாக பயன்படுத்த தவறியிருக்கிறார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். இயக்குநர் இவரை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். ஒரு நல்ல நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் இந்த மாதிரியான கதைகளை தேர்வு செய்கிறார் என்ற குழப்பம் ரசிகர்களிடையே நிலவுகிறது. அதேபோல் தனது தோற்றத்திலும் சற்றே முதிர்ச்சியுடன் காணப்படுகிறார். ஜிவி பிரகாஷை விட இவருக்கு வயது அதிகம் போல் தெரிகிறது. இதனாலேயே இருவருக்குமான கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

gv prakash aishwarya rajesh starring dear movie review

படத்தின் ஒரே ஒரு ஆறுதல் காளி வெங்கட்டின் நடிப்பு. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்து கைதட்டல் பெற்று இருக்கிறார். ஜீவியின் அம்மாவாக வரும் ரோகிணி தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் மற்ற முன்னணி நடிகர்கள் அனைவருமே அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில், இந்த படத்துக்கு ஜீவிதான் இசையா என்ற கேள்வி எழுப்பும் அளவிற்கு இசையை கொடுத்திருக்கிறார். அந்த அளவுக்கு சுமாரான இசையை படம் முழுவதும் அள்ளித் தெளித்திருக்கிறார். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவில் ஐஸ்வர்யா ராஜேஷ் வீடு சம்பந்தப்பட்ட காட்சிகளும் ஜீவியின் ஆபீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய ஒரு வரிக் கதையை வைத்துக் கொண்டு 2.30 மணி நேரம் படத்தை ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர் இந்த படத்திற்கான டைட்டிலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்து இருக்கலாம். 


டியர் - பாவம்!