
சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த முதல் திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, இவர்களுடன் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெற்றி பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது...
"குறைந்த திரையரங்குகளே கிடைத்தாலும், இந்த திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருந்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. ஒரு படம் தயாரிக்கும் போது நிறைய விஷயங்களை யோசிப்பார்கள். அப்படியும் என் மீது நம்பிக்கை வைத்த சிவா சார், கலையரசு, அருண்ராஜாவுக்கு நன்றி. கிரிக்கெட் தெரியாத என்னை நம்பிய அவர்களுக்கு நன்றி. என் அப்பா இல்லாத குறை தெரிந்ததே இல்லை. அப்படி என்னை வளர்த்தார் அம்மா. இந்த படம் நடித்த பிறகு, இனிமே நீ படமே நடிக்கவில்லையென்றால் கூட பரவாயில்லை. இது போதும் உன் சினிமா வாழ்க்கைக்கு என்று என் அம்மா சொன்னாங்க. எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு இது தான். என் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்த கிருத்திகாவுக்கும், மோனாவுக்கும் வாழ்த்துக்கள். இதுதான் உண்மையான வெற்றி விழா. நிறைய படங்கள் ஓடுகிறதோ இல்லையோ உடனே வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். இது அப்படி இல்லை. நான் உண்மையை தான் சொல்கிறேன். பொய் சொல்லவில்லை" என்றார்.