உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவலால் பல துறைகளின் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ் சினிமா படபிடிப்புகளும் கரோனா வைரஸ் அச்சத்தால் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தினக்கூலியை நம்பியிருக்கும் ஃபெப்சி பணியாளர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது.

இந்நிலையில் ஃபெப்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க நடிகர்கள் சிவக்குமாரும், அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து 10 லட்சம் ரூபாய், நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம், பார்த்திபன் 250 மூட்டை அரிசி, விஜய் சேதுபதி 10 லட்சம், ரஜினிகாந்த் 50 லட்சம், தனுஷ் 15 லட்சம், ஹரிஷ் கல்யாண் 1 லட்சம் மற்றும் ராதா ரவி, கலைப்புலி தாணு, பிரகாஷ் ராஜ், மனோபாலா, சித்ரா லக்ஷ்மணன், ஹரி, கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், ஷங்கர் என பல்வேறு சினிமா பிரபலங்கள் அவரவருக்கேற்ப நிதியுதவி அளித்துள்ளனர். எனினும் நடிகர்கள் தவிர இதுவரை எந்த நடிகையும் ஃபெப்சிக்கு நிதியுதவி அளிக்காத நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் நடிகையாக முன்வந்து 1 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.