நாடு முழுவதும் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாய் கடியினால் உருவாகும் ரேபிஸ் வைரஸ், மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தெருநாய்க்கடி அதிகமாக இருக்கிறது. இதனால் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது. மேலும் டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் இருக்கும் தெரு நாய்களை 8 வாரங்களில் பிடிக்க கெடு விதித்தது.
இந்த உத்தரவு நாய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் இருந்தாலும் நாய் விரும்பிகளுக்கு மத்தியில் எதிர்ப்பை உருவாக்கியது. விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்த உத்தரவிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். இதில் திரை பிரபலங்கள், இயக்குநர் வசந்த், நடிகை வினோதினி, நடிகை அம்மு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனிடையே நடிகை சதா, நீதிமன்ற உத்தரவு நாய்களை பெருமளவில் கொல்லும் என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து நடிகைகள் வேதிகா, கனிகா ஆகியோர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்துள்ளார். ஒரு நிகழ்ச்சியின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “எல்லோருக்கும் விளங்குகள் மீது ஒரு அன்பு இருக்கும். குறிப்பாக தெரு நாய்களை நிறைய பேர் நாய்கள் என்றே சொல்ல மாட்டார்கள். நம்மில் ஒரு வராகத்தான் பார்ப்பார்கள். அந்தளவிற்கு நாய்களுடன் இணக்கமாக இருப்பார்கள். அவர்களின் உணர்வுகளைத் தடுப்பது சரியில்லை. அதனால் நீதிமன்ற உத்தரவை நான் ஆதரிக்கவில்லை” என்றார்.