/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/450_54.jpg)
இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா இருவரும் காதலித்து கடந்த 2022 ஜூன் 9ஆம் தேதி கரம் பிடித்தனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இத்திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. மேலும் அதை இயக்கும் பணிகளை கெளதம் மேனன் மேற்கொண்டார். இதனால் பல்வேறு கட்டுபாடுகளுடன் இத்திருமணம் நடந்தது.
இத்திருமணம் ‘நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale)என்ற பெயரில் நீண்ட காலமாக உருவாகி வந்தது. இதில் நயன்தாராவின் திருமணம் அல்லாது அவரது வாழ்க்கை பயணத்தையும் விவரிப்பதாகவும் இருக்கும் என நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும் வருகிற 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்தாளன்று வெளியாகும் என தெரிவித்திருந்தது. இதையொட்டி படத்தின் ப்ரொமோவை தொடர்ச்சியாக அடுத்தடுத்து சமீபத்தில் வெளியிட்டு வந்தனர். அதில் ஒரு ப்ரொமோவில் நானும் ரௌடி தான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளும், பாடல்களும் மூன்று விநாடி இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து நானும் ரௌடி தான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் படத்தின் பாடலையும், காட்சியையும் தன்னிடம் அனுமதி கேட்காமல் வீடியோவில் பயன்படுத்தியதாகக் கூறி 3 விநாடிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனை நயன்தாராவே தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து, தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்திருக்கிறோம். உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.
தடையில்லா சான்றிதழ் மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என் மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?” எனக் குற்றம் சாட்டி, ‘பிறரது துன்பத்தில் இன்பம் காணுதல்’ என்று பொருள் குறிக்கும் ‘Schadenfreude’ என்ற ஜெர்மனிய வார்த்தையை பயன்படுத்தி கடுமையாக விமர்சித்திருந்தார். விக்ணேஷ் சிவனும், தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தனுஷ் பேசிய ‘வாழு வாழ விடு’ என்ற வீடியோவை பகிர்ந்து “இதையெல்லாம் நம்பும் சில அப்பாவி ரசிகர்களுக்காக நான் மனதார கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. நயன்தாராவுக்கு நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நயன்தாராவின் பதிவுக்கு பார்வதி, ஸ்ருதிஹாசன், அனுபமா பரமேஸ்வரன், மஞ்சிமா மோகன், பார்வதி, அஞ்சு சூரியன், நஸ்ரியா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌரி ஜி கிஷன், அதிதி பாலன், அன்னா பென் உள்ளிட்ட நடிகைகள் லைக் செய்து தங்களது ஆதரவை தெரிவித்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் லைக் செய்திருந்ததாகவும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டது. ஆனால் பின்பு அவர் லைக்கை நீக்கிவிட்டதாக கூறப்பட்டு வருகிறது. தனுஷும் ஐஸ்வர்யா ராஜேஷும் வட சென்னை படத்தில் இணைந்து நடித்திருந்தனர். மேலும் தனுஷ் தயாரித்திருந்த காக்கா முட்டை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)