
உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான 78வது கேன்ஸ் விழா கடந்த மே 13 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் படங்கள் திரையிட்டும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு மலையாள திரைப்பட இயக்குநர் பாயல் கபாடியா நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார். இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் டென்ஸல் வாஷிங்டனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தங்கப்பனை விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் சிவப்புக் கம்பள அணிவகுப்பு பிரபலமாக பார்க்கப்படும் நிலையில் ஆண்டுதோறும் இதில் இந்திய பிரபலங்களும் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்து 20 வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு ஆண்டும் தனது தனித்துவமான ஆடையின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்து வரும் ஐஸ்வர்யா ராய் இந்தாண்டும் அதை தொடர்ந்தார். பிரபல ஆடை வடிவமைப்பாளரான மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த பாரம்பரிய வெள்ளை நிற புடவையில் அணிவகுத்தார். இதில் தனது நெற்றியில் சிந்தூருக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை நன்கு தெரியும் படி வைத்திருந்தார். சமீபத்தில் பயங்கரவாதிகள் காஷ்மீரில் தாக்குதல் நடத்தியதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில் இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை அதிதி ராவ், சிந்தூர் நிறமான சிவப்பு நிற புடவையில் நெற்றியில் சிந்தூரிட்டு தோன்றியிருந்தார். இதை தவிர்த்து மறைந்த ஸ்ரீதேவியின் மகளான நடிகை ஜான்வி கபூர் வித்தியாசமான உடையில் தோன்றியிருந்தார். இது அங்கு பலரது கவனத்தை ஈர்த்தது. இவர் இந்த விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. ஜான்வி கபூர் நடித்த ஹோம்பவுண்ட் திரைப்படம் இந்த விழாவில் திரையிடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.