பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் கடைசியாக மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து எந்த படத்திலும் இன்னும் அவர் அதிகாரப்பூர்வமாக கமிட்டாகவில்லை. இந்த நிலையில் தனது புகைப்படம் ஆன்லைனில் தவறாக பயன்படுத்துவதாக அதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

Advertisment

ஐஸ்வர்யா ராய் சார்பில் மூத்த வழக்கறிஞர் சந்தீப் சேதி, இந்த வழக்கை தொடுத்துள்ள நிலையில், இணையத்தில் ஐஸ்வர்யா ராயின் அனுமதி இல்லாமல் அவரது பெயர், புகைப்படம் மற்றும் ஏஐ-யால் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றை பல்வேறு நிறுவனங்கள்  விளம்பரப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏஐ-யால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களும் ஆபாச படங்களில் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்து அவரது தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேஜஸ் காரியா, தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், ஐஸ்வர்யா ராயின் அனுமதியின்றி பயன்படுத்தப்படும் செயலுக்கு தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்து, குற்றம் சாட்டப்பட்ட 151 இணைய இணைப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் நவம்பர் 7 ஆம் தேதி கூட்டுப் பதிவாளர் முன்பும், அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி நீதிமன்றம் முன்பும்  இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.