பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட மணிரத்னம் தற்போது அதற்குண்டான அனைத்து வேலைகளையும் முடித்து படப்பிடிப்புக்கு தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்துக்கு கார்த்தியும், குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேசும் தேர்வாகி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், மோகன்பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் மற்ற நடிகர்கள் யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், ஆகியோர் நடிக்கின்றனர். கதைப்படி நந்தினி கதாபாத்திரம் பேரழகி. கதையின் வில்லியான இந்தக் கதாபாத்திரம், பல்வேறு வேடங்கள் தரித்து ஏமாற்று வேலை செய்யும். எனவே, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராயை வில்லியாக விதவிதமான தோற்றங்களில் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.