
2016ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு உண்மைக் கதையினைத் தொட்டு ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வசந்த் பாலசுந்தரம். பாலுமகேந்திரா சினிமாப் பட்டறையில் திரு. பாலுமகேந்திரா அவர்களின் நேரடிப் பார்வையில் சினிமா கற்றுக்கொண்டு, இயக்குநர் சீனு ராமசாமி அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவத்தோடு “அகம் திமிறி” என்னும் சுயாதீனத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஆரோக்கியமாகப் பிறந்த குழந்தைகளையே தூக்கி வீசிவிடும் பெற்றோர்களுக்கு மத்தியில் மன, உடல்ரீதியான குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளை எவ்வித முகச்சுளிப்புமின்றி தங்கள் வாழ்நாள் முழுவதும் பராமரிக்கும் பெற்றோர்களும் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதுதான் கனமான உண்மை. இப்படிப்பட்ட குழந்தைகளை தெய்வக்குழந்தைகள் என்றும், இவர்களைப் பராமரிக்கும் பெற்றோர்களை இறைநிகர் உள்ளங்கள் என்றும் குறிப்பிடும் இயக்குநர் வசந்த் பாலசுந்தரம் இப்படம் குறித்து பேசும்போது...
"இந்தப் படம் எடுக்கத் தூண்டியதே நான் சந்தித்த சில மனிதர்களும், படித்த சில செய்திகளும் தான். நாம் அன்றாடம் கடந்து போகிற மக்கள் மத்தியில் எத்தனை பேர் மிகவும் அசாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிவதில்லை. அப்படிப்பட்ட அசாதாரண வாழ்க்கை வாழும் மனிதர்களுடைய வலியைப் பதிவு செய்ய விருப்பப்பட்டேன். அதுதான் ”அகம் திமிறி”. கருணைக்கொலை தான் 'அகம் திமிறி' படத்தின் மையப் பேசுபொருள். படத்தைப் பொறுத்தவரை கருணைக்கொலைக்கு எதிராகவோ, ஆதரவாகவோ எவ்விதப் பிரசாரத்தையும் மேற்கொள்ளவில்லை. கருணைக் கொலை பற்றிய புரிதல் நம்மிடையே போதிய அளவில் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

வெளியே இருந்து பார்க்கும்போது ஒரு உயிரைக் கொல்வதா என்ற பதற்றம் உருவாகலாம். ஆனால் கருணைக்கொலையை ஆதரிப்பவர்களின் மனநிலையையும் அவர்களின் அகச் சிக்கல்களையும் நாம் புரிந்துகொண்டால் சரியான நிலைப்பாட்டை எடுக்கலாம் என நினைக்கிறேன். இப்படத்தில் நான் பேச நினைத்ததும் இதுவே. குறைபாட்டுடன் அல்லது இயலாமையுடன் இருப்பவர்களைக் கவனித்துக்கொள்பவர்களின் மனநிலையையும் அவர்களின் வேதனையையும் பார்வையாளர்களுக்குக் கடத்தவேண்டும் என நினைத்தேன். என்னளவில் அதை நான் சிறப்பாகச் செய்திருப்பதாகத்தான் நினைக்கிறேன். முக்கியமாக, கருணைக்கொலை வேண்டும், கூடாது என்னும் இரண்டு தரப்பினரின் வாதத்தையும் படத்தில் பதிவு செய்திருக்கிறேன். உலக நாடுகள் முழுவதும் பேசுபொருளாக இருக்கக்கூடிய கருணைக்கொலை மீதான ஒரு உரையாடலை நம் மக்களிடையே ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் ”அகம் திமிறி” படத்தின் மூலம் தொடங்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். படத்தைப் பார்க்கும் மக்கள் மனதில் இந்த விவாதம் நிகழ்ந்தால் அது மிக்க மகிழ்ச்சி" என்றார்.