Advertisment

விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் நடந்தது என்ன? விளக்குகிறார் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வி.பாலு!

v balu

Advertisment

இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த வேண்டும் என்ற வணிக வரித்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் விஜய் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருந்தது. அதில், “சமூகநீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோவாக இருக்க கூடாது” என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்க்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகள் குவிந்துவருகின்றன. இந்த வழக்கின் முழுவிவரம் குறித்து அறிய சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வி.பாலுவிடம் பேசினோம். நக்கீரனிடம் அவர் பகிர்ந்து கொண்டவை...

தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவரும் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் என்ன நடந்தது?

நீதிபதி வழங்கிய தீர்ப்பின்படி விஜய் விதிமீறல் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிற எந்தவொரு பொருளுக்கும் சுங்கவரி என்று ஒன்று உண்டு. அந்தச் சுங்க வரியை விஜய் கட்டிவிட்டார். தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு நுழைவு வரி என்று ஒன்று உண்டு. அது வெளிநாடுகளில் இருந்து மட்டுமல்ல வெளிமாநிலங்களில் இருந்தும் கார் போன்றவற்றை இறக்குமதி செய்தால் பொருந்தும். மாநிலத்திற்கென்று வசூலிக்கப்படுகிற நுழைவு வரியை விஜய் கட்டவில்லை. அதைக் கட்டினால்தான் அந்த வண்டியை சாலைகளில் ஓட்டுவதற்கான அனுமதியை துறைசார் அதிகாரிகள் வழங்குவார்கள். இதைக் கட்டினால்தான் நீங்கள் வண்டி ஓட்ட முடியும் எனும்போது அதை நான் கட்டமாட்டேன் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைப்பது சட்டத்திற்கு அப்பாற்பட்டது. 2012இல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதியரசர் எஸ்.என்.சுப்ரமணியன் அவர்களால் தற்போது முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது?

Advertisment

தன்னைப் பற்றிய தகவல்களை நடிகர் விஜய் சரியாகக் கொடுக்கவில்லை. எந்தவிதத்தில் தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடவில்லை. நீங்கள் ரீல் ஹீரோவாக மட்டும் இருக்கக்கூடாது. ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இதில், கடைசியாக கூறிய விஷயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

நீதிபதியின் இந்த சொல்லாடல் சரியானதுதானா?

இதை நீதிபதியின் அறச்சீற்றமாகப் பார்க்கிறேன். நாம் ஒரு திரையரங்கிற்குச் சென்று டிக்கெட் எடுக்கிறோம். டிக்கெட்டின் விலை 200 ரூபாயாக உள்ளது. அந்த 200 ரூபாயில் பல வரிகள் அடக்கம். அத்தனை வரிகளையும் கொடுத்துதான் ஒரு ரசிகன் திரைப்படத்தைத் திரையரங்கில் பார்க்கிறான். வரியைச் செலுத்தி ஒரு ரசிகன் வாங்குகின்ற நுழைவுச் சீட்டின் மூலம் வருகின்ற வருமானத்தை வைத்துதான் இவர்களுக்கு சம்பளம் கிடைக்கிறது. உங்களைக் கடவுளாகப் பார்க்கிற ஒரு ரசிகன் வரி செலுத்தி பெறும் நுழைவுச் சீட்டின் மூலம் சம்பளம் பெறும் நீங்கள் ஏன் வரி கட்ட மறுக்குறீர்கள் என்பதுதான் நீதிபதியின் அந்த அறச்சீற்றத்திற்கு காரணம். சட்டத்தின்படி கட்ட வேண்டிய வரியைக் கட்டாமல் இருப்பது வரி ஏய்ப்புதான். மெர்சல் படத்தில் வரி குறித்து விஜய் பேசியது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது. அரசாங்கத்தை கேள்விகேட்பவராக இருக்கும் நீங்கள் அதற்கு கட்டுப்பட்டவராக இருக்கவேண்டும்.

நுழைவு வரி கண்டிப்பாக கட்ட வேண்டும் எனக் கூறியதோடு ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த அபராதம் போடப்பட்டதற்கான காரணம் என்ன?

நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களைக் கொடுத்ததற்காக இந்த அபாரதமானது போடப்பட்டுள்ளது. பிரம்மாண வாக்குமூலத்தில் என்ன தொழில் செய்கிறார் என எந்த இடத்திலும் விஜய் குறிப்பிடவில்லை. அவருக்கு வழக்கு நடத்திய வழக்கறிஞர்தான் விஜய் பிரபலமான நடிகர் எனக் குறிப்பிடுகிறார் என்று அந்தத் தீர்ப்பிலேயே நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய தொழிலை விஜய் குறிப்பிடாததற்கு என்ன காரணம்?

இதில் உள்நோக்கம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. பிரம்மாண வாக்குமூலத்தை தயார் செய்யும்போது கவனக்குறைவால் இந்தப் பிழை ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். இது கவனக்குறைவால் ஏற்பட்டது. இந்த அபராதம் பொதுமக்கள் பார்வையில் என்னைப் பற்றி தவறான பார்வையை ஏற்படுத்தும். அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன் என்று நீதிமன்றத்தில் விஜய் தரப்பு வாதிட்டிருக்கலாம். சில நேரங்களில் நீதிபதிகள் அதை ஏற்றுக்கொள்வார்கள். இந்த விவகாரத்தில் விஜய் தரப்பு அப்படியேதும் கோரியதா என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் இதற்கு உள்நோக்கம் கற்பிக்கத் தேவையில்லை.

actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe