சின்னத்திரைக்காக வழங்கப்படும் ‘எம்மி’ விருதுகள், 1949ஆம் ஆண்டு தொடங்கி 76 ஆண்டுகளாக ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான 77வது எம்மி விருது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள், சீரிஸ்கள் உள்ளிட்டவைகளுக்கு சிறந்த நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பல்வேறு பிரிவுகளில் விருது கொடுக்கப்பட்டது.
அந்த வகையில் லிமிடெட் சீரிஸ் பிரிவில் சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை என மொத்தம் ஆறு விருதுகளை வாங்கியுள்ளது ‘அடலசன்ஸ்’ தொடர். இதில் சிறப்பு அம்சமாக சிறந்த துணை நடிகருக்கான விருதை சீரிஸில் நடித்த 15வயது சிறுவனான ஓவன் கூப்பர் வாங்கியுள்ளார். இதன் மூலம் சிறிய வயதில் லிமிடெட் சீரிஸ் பிரிவில் சிறந்த துணை நடிகருக்கான எம்மி விருதை வென்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஓவன் கூப்பரருக்கு முன்பாக, 1973 ஆம் ஆண்டு ‘தட் செர்டைன் சம்மர்’ படத்திற்காக 16 வயதுடைய ஸ்காட் ஜேக்கபி என்பவர், பிரைம் டைம் எனும் பிரிவில் எம்மி விருதை வென்றிருந்தார். இதையடுத்து 1984 ஆம் ஆண்டு ‘சம்திங் அபௌட் அமெலியா’ படத்திற்காக 14 வயதுடைய ரோக்ஸானா சால் என்பவர் லிமிடெட் சீரிஸ்கான சிறந்த துணை நடிகைக்கான எம்மி விருதை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘அடலசன்ஸ்’ தொடர் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த மார்ச் மாதம் மினி சீரிஸாக வெளியானது. ஆங்கில மொழியில் நான்கு எபிசோடுகளாக வெளியான இந்த மினி சீரிஸ், சமூக வலைதளங்களில் டீனேஜ் குழந்தைகள் எந்தளவு பாதிக்கப்படுகிறார்கள், அது கொலை குற்றம் வரை எப்படி செல்கிறது என்பதை பேசியிருந்தது. மேலும் பெற்றோர்கள் குழந்தையை எப்படி கவனிக்க வேண்டும், சமூகத்தின் பொறுப்பு எந்தளவு முக்கியம் ஆகியவற்றையும் சொல்லியிருந்தது. இந்த சீரிஸில் 13 வயது கொலை குற்றவாளியாக விருது வென்ற ஓவன் கூப்பர் நடித்திருந்தார்.
இந்த சீரிஸ் குழந்தைகளுக்கான ஒரு விழிப்புணர்வு சீரிஸாக இருப்பதாக பலராலும் பாராட்டப்பட்டது. ஒரு படி மேலே போய் பிரிட்டிஷ் பள்ளிகளில் விழிப்புணர்வுக்காக திரையிடவும் பட்டது. வெளியான சமயத்தில் உலககெங்கும் உள்ள சினிமா ரசிகர்களை இப்படம் கவர்ந்து சமூக வலைதளங்களில் பேசு பொருளானது நினைவுகூரத்தக்கது.