
நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படம்தான் ‘துக்ளக் தர்பார்’. புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இப்படத்தை இயக்க, ஆர். பார்த்திபன், அதிதிராவ் ஹைதாரி, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை செவன் ஸ்கிரீன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் வியாகாம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. விஜய் சேதுபதியின் '96' படத்தைத் தொடர்ந்து கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அப்போது இந்தப் படம் குறித்து வெளியான தகவலின்படி, இப்படத்தின் ஷூட்டிங் 35 நாட்கள் மட்டுமே முடிவடைந்திருப்பதாகவும் மீதம் 40 நாட்களுக்கு ஷூட்டிங் எடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.
மீண்டும் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதிதி ராவ் திடீரென படத்திலிருந்து விலகியிருக்கிறார். லாக்டவுனால் அவருடைய கால்ஷீட் முழுவதும் குளறுபடியானதால், இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மாற்றாக ராஷி கண்ணாவை படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.