Skip to main content

கிண்டலுக்கு உள்ளான ‘ஆதிபுருஷ்’ டீசர்; படக்குழு எடுத்த திடீர் முடிவு

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

adipurush new release date announced

 

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். 

 

3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்து வந்தது. இது தொடர்பாக மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குரு சத்யேந்திர தாஸ், உத்தரப்பிரதேச துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கண்டனம் தெரிவித்திருந்தனர். 

 

‘ஆதிபுருஷ்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் பார்வையாளர்களுக்குச் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் நோக்கில் இன்னும் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது எனப் படக்குழு தெரிவித்துள்ளது. 

 

ஏற்கனவே ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாகத் தகவல் வெளியான நிலையில் அதனைப் படக்குழு தற்போது உறுதி செய்துள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பாகத் திரை வட்டாரத்தில், இப்படத்தின் டீசர் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளானதால் படக்குழு இப்படி திடீர் முடிவு எடுத்துள்ளது என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. 

 

பிரபாஸ் நடிப்பில் 'ஆதிபுருஷ்' படம் மட்டுமல்லாது, நாக் அஸ்வின் இயக்கும் 'ப்ராஜெக்ட் கே' படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். இது போக பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' படமும் உருவாகிறது. இப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிப்பிற்கு சின்ன பிரேக் விடும் பிரபாஸ்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Prabhas take a short break from cinema

பிரபாஸ், சமீபத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் படத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சனமே பெற்ற இப்படம், உலகளவில் ரூ. 600 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்து தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கும் தி ராஜா சாப், சந்தீப் ரெட்டி வங்காவின் ஸ்பிரிட், இந்தியில் நாக் அஷ்வின் இயக்கும் கல்கி 2898 ஏடி உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். 

இப்படி வரிசையாகப் படங்களை கமிட் செய்துள்ள பிரபாஸ் தற்போது நடிப்பிலிருந்து சிறிய பிரேக் எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலையை பாதுகாப்பதற்காக ஒரு மாதம் ஓய்வெடுத்து, அடுத்த மாதமான மார்ச்சில் மீண்டும் நடிப்புக்கு திரும்ப பிரபாஸ் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் சலார் படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றதால், அடுத்து எவ்வாறு முன்னோக்கி செல்லலாம் என திட்டம் தீட்டவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மீண்டுமொரு கேஜிஎஃப்பா? - ‘சலார்’ - விமர்சனம்!

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
salaar movie review

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த கே.ஜி.எஃப் படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பிரசாந்த் நீல், பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நாயகன் பிரபாஸ் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கி இருக்கும் பேன் இந்தியா திரைப்படம் சலார். பாகுபலி, கே.ஜி.எஃப் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியால் இவர்கள் இணையும் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறச் செய்தது. அந்த பிரம்மாண்ட எதிர்பார்ப்பை சலார் திரைப்படம் பூர்த்தி செய்ததா இல்லையா?

உயிருக்கு உயிரான நண்பன் மீது அளவு கடந்த பாசம். தன்னைப் பெற்ற தாய் மீது அதீத பாசம். இப்படி இரண்டு பேருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தில் யார் பக்கம் சலார் பிரபாஸ் நிற்கிறார் என்பதே சலார் பட முதல் பாகத்தின் கதை. இந்தியாவில் தன் அம்மாவின் அஸ்தியை கரைக்க வெளிநாட்டிலிருந்து வரும் சுருதிஹாசனை ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் முக்கிய தலைவர்களின் ஒத்துழைப்போடு கொலை செய்ய முயற்சி செய்கிறது. அவர்களிடமிருந்து சுருதிஹாசனை காப்பாற்றி பிரபாஸிடம் ஒப்படைக்கிறார் மைம் கோபி. தாய் ஈஸ்வரி ராவின் கட்டளைக்கிணங்க எந்த அடிதடிக்கும் செல்லாமல் சாதுவாக இருக்கும் பிரபாஸ், சுருதிஹாசனை கொல்ல வரும் கொலைகாரர்களை இரண்டு முறை தன் தாயின் உத்தரவோடு அடித்து துவம்சம் செய்து காப்பாற்றி தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்கிறார். இதைக் கேள்விப்பட்ட சுருதிஹாசனை கொல்லத் துடிக்கும் வில்லன் பிரித்விராஜ் கும்பல், பிரபாஸை துவம்சம் செய்ய அவர் இருக்கும் இடத்திற்கு புறப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து மிகப்பெரிய புஜபல பராக்கிரமசாலி பிரபாஸ் ஏன் தன் தாயின் கட்டுப்பாட்டிற்குள் சாதுவாக இருக்கிறார்? இவருக்கும் அவருடைய நண்பன் பிரித்விராஜுக்கும் இருக்கும் உறவு என்ன? அவர்களுக்குள் நடக்கும் பிரச்சனைக்கான காரணம் என்ன? என்பதே சலார் முதல் பாகத்தின் மீதிக் கதை. கே.ஜி.எஃப் தந்த மெகா ப்ளாக் பஸ்டர் வெற்றி தந்த உற்சாகத்தோடு சலார் படத்தையும் கே.ஜி.எஃப் போல் அதிரடி ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல். கே.ஜி.எஃப் முதல் பாகம் போல் ஒவ்வொரு படியாக பில்டப்புகளையும் ஆக்சன் காட்சிகளையும் கூட்டாமல் எடுத்த எடுப்பிலேயே முதல் காட்சியிலிருந்து பில்டப்புகள் கூடிய ஆக்சன் காட்சிகளுடன் அதிரடியாக படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல். இது போகப் போக தன் முந்தைய படங்கள் போல் சென்டிமென்ட் ஆக்சன் காட்சிகளோடு கூடிய பிரம்மாண்ட படமாக முதல் பாதி விரிகிறது.

இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் காட்சிகள் ஆரம்பிக்கிறது. அதில் பிரபாஸுக்கும் பிரித்விராஜுக்குமான நட்பு, பகை, மோதல், அடிதடி சண்டை, பழிவாங்கல் என நீள்கிறது. எங்கெங்கு ஆக்சன் காட்சிகள் தேவையோ அதற்கு ஏற்றார்போல் பில்டப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி கூஸ்பம்ப்ஸ் மொமெண்ட்களை உருவாக்கி, அதற்கு ஏற்றார்போல் சண்டைக் காட்சிகளையும் பிரம்மாண்டமாக உருவாக்கி படம் முழுக்க ஒரே பில்டப்புகளாக கொடுத்து கே.ஜி.எஃப் வாங்கிய கைத்தட்டல்களை இந்தப் படத்தில் வாங்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல். அதற்கு சரியான அளவில் பலன் கிடைத்ததா என்றால்? சற்று சந்தேகமே!

முதல் பாதி படம் ஆரம்பித்து சற்று மெதுவாக நகர்ந்தாலும், போகப்போக வேகம் எடுத்து பிரசாந்த் நீலின் பாணியிலேயே படம் நகர்ந்து கைத்தட்டல்களும் விசில்களும் பெற்றது. ஆனால் இரண்டாம் பாதியோ, சற்றே குழப்பமான திரைக்கதையோடு ஆங்காங்கே வரும் காட்சி அமைப்புகள் சரியாக ரசிகர்களிடம் போய்ச் சேராத வண்ணம் பல குழப்பங்கள் நிறைந்து, காட்சி அமைப்புகள் அமைந்து அதை சரிப்படுத்தும் விதமாக கடைசி கட்டக் காட்சிகளில் குழப்பத்திற்கான விடைகளைக் கொடுத்து, ஆக்சன் காட்சிகளோடு இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுத்து படத்தை முடித்துள்ளார். முதல் பாதியில் இருந்த பரபரப்பும் விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் சற்றே மிஸ்ஸிங். குறிப்பாக கேஜிஎப் படத்தில் நாம் எந்தெந்த விஷயங்களுக்கெல்லாம் கைத்தட்டி விசில் அடித்து அதே சமயம் கூஸ்பம்ப் மொமெண்ட்ஸ்களை அனுபவித்து, சென்டிமென்ட் காட்சிகளில் நெகிழ்ந்து ரசித்தோமோ அவையெல்லாம் இந்த படத்தில் ஆங்காங்கே மிஸ் ஆவது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.

இருந்தும் பிரசாந்த் நீலின் ஸ்டைலில் உருவான திரைக்கதையும், பிரபாஸின் ஸ்கிரீன் பிரசன்ஸும் படத்தை தாங்கிப் பிடித்து ரசிக்க வைத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது. எப்பொழுதும் போல் புஜபல பராக்கிரமசாலியாக இந்தப் படத்திலும் திகழ்ந்துள்ளார் ரெபெல் ஸ்டார் பிரபாஸ். பாகுபலிக்குப் பிறகு மீண்டும் வெற்றிப் பாதைக்கு சலார் படம் மூலம் திரும்பி இருக்கிறார் பிரபாஸ். கேஜிஎஃப் கொடுத்த அளவு இந்தப் படத்திற்கு வரவேற்பு இல்லை என்றாலும் பிரபாஸ் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்து அதையும் ரசிக்கும்படி செய்திருப்பது வரவேற்பைப் பெற்று தியேட்டரில் கைத்தட்டல் பெற்றிருக்கிறது. படம் முழுவதும் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து நடித்திருக்கிறார் பிரபாஸ். வழக்கமான நாயகியாக வரும் சுருதிஹாசன் வழக்கமான நடிப்பை நடித்துவிட்டு வலம் வருகிறார். தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ் அவருக்கான வேலையை எப்பொழுதும் போல் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

வில்லன் பிரித்விராஜ் பல காட்சிகளில் மௌனம் மட்டுமே சாதிக்கிறார். போகப் போக வசனம் பேசி இறுதிக் கட்டத்தில் வெடிக்கிறார். இவருக்கான வேலை இரண்டாம் பாகத்தில் நிறையவே இருக்கிறது என்பதை அந்த காட்சி மூலம் காட்டியிருக்கிறார். கொஞ்ச காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார் மைம் கோபி. முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா, ஜான் விஜய், கருடா ராம் உட்பட பலர் அவரவருக்கான வேலையைச் சிறப்பாக செய்து படத்திற்கு சிறப்பு சேர்த்து பிரம்மாண்டத்தைக் கூட்டி உள்ளனர். புவன் கௌடா ஒளிப்பதிவில் கேஜிஎப் படம் போல் சலார் படமும் கறுப்பு, வெள்ளை டோனில் பிரம்மாண்டமாக தெரிகிறது. ஒவ்வொரு காட்சியும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். அதனாலேயே படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. குறிப்பாக படத்திற்கான லைட்டிங் அபாரம். ரவி பஸ்ரூர் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை கேஜிஎப் படத்தை ஞாபகப்படுத்துகிறது.

கேஜிஎஃப் படம் போல் இந்தப் படத்திலும் ஆக்சன் காட்சிகள் அதகளப்படுத்தி கைத்தட்டல்கள் விசில்களைப் பெற்றாலும், சென்டிமென்ட் காட்சிகள் ஏனோ மனதைத் தொட மறுக்கிறது. அதேபோல் படத்தின் நீளமும் அதிகமாக இருப்பதால், இரண்டாம் பாதியில் வரும் குழப்பமான காட்சிகள் அயர்ச்சியாக இருக்கிறது. இருப்பினும் படத்தின் மேக்கிங், பிரபாஸின் ஸ்கிரீன் பிரசன்ஸ், பிரசாந்த் நீலின் யூனிக்கான திரைக்கதையும், அதற்கு ஏற்றார்போல் அமைந்த ஆக்சன் காட்சிகளும் படத்தைக் காப்பாற்றி கரைச் சேர்த்திருக்கிறது.

சலார் - பளார்!!