ADD Director Sadiq Interview

Advertisment

தொலைக்காட்சியோ, செல்போனோ, சினிமாவோவிளம்பரங்கள் இல்லாமல் இன்று நம்முடைய வாழ்க்கை இல்லை என்கிற அளவுக்கு நம்மைச் சுற்றி பல்வேறு விளம்பரங்கள் பல்வேறு வகைகளில் வலம் வருகின்றன. விளம்பர உலகில் தன்னுடைய அனுபவங்கள் குறித்து விளம்பரப்பட இயக்குநர் சாதிக் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

நான் சினிமாவுக்கு வந்தது நடிக்கும் ஆசையில் தான். ரஜினி சாருடன் படையப்பா, சுதீப் சாருடன் வில்லனாக ஒரு படம் என்று சில படங்கள் செய்த பிறகு விளம்பரப்பட உலகுக்குள் வந்தேன். இதுவரை 1000 விளம்பரப் படங்களை இயக்கியிருக்கிறேன். விளம்பரப் படங்களைப் பொறுத்தவரை குறைந்த நேரத்திற்குள் கதையைச் சொல்லியாக வேண்டும்.மக்களைப் பொருள் வாங்க வைக்க வேண்டும். விளம்பரத்தில் சினிமா நடிகர்கள் நடிக்கும்போது ரீச் அதிகமாக இருக்கும். சூர்யா, சத்யராஜ், சினேகா என்று பல்வேறு நட்சத்திரங்களோடு நான் பணியாற்றியிருக்கிறேன். ஆச்சி மசாலா ஓனரை வற்புறுத்தி அதன் விளம்பரத்தில் நான் நடிக்க வைத்தேன். ஓனர்களை வைத்து விளம்பரத்தை எடுத்தாலும் அவர்களை மக்கள் ரசிக்கும்படி தான் நாங்கள் காட்டுவோம். நல்ல பட்ஜெட் இருந்தால் பிரம்மாண்டமான விளம்பரங்களை எடுக்கலாம். சினேகாவுடைய சிரிப்புதான் மக்களிடம் அவரை அதிகம் கொண்டு சேர்த்திருக்கிறது என்று நினைக்கிறேன். பிரபு சார் ஒரு குழந்தை மாதிரி. அவர் ஷூட்டிங்குக்கு வரும்போது அவர் வீட்டில் இருந்து அனைவருக்கும் சுவையான உணவு வரும்.

சத்யராஜ் சாரோடும் பல விளம்பரங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். சூர்யா சாருடன் நான் பணியாற்றிய விளம்பரம் 2 மணி நேரத்தில் எடுக்கப்பட்டது. மாடல்களை வைத்தும் நிறைய வெற்றிகரமான விளம்பரங்களை இயக்கியிருக்கிறேன். பெங்களூரு, பம்பாய் ஆகிய பகுதிகளிலிருந்து மாடல்களை நாங்கள் தேர்ந்தெடுப்போம். இன்று பல நடிகைகள் மாடல்களாக இருந்து வந்தவர்கள் தான். மாடல்களிடம் நல்ல அர்ப்பணிப்பு இருக்கும். மாடல்களில் பல குழந்தைகளும் அடக்கம். விளம்பரத்தில் சின்னச் சின்ன கிளாமர் விஷயங்கள் இருக்கும்போது அது எளிதில் மக்களைச் சென்றடையும். தமன்னா, அஞ்சலி போன்றோரை ஆரம்ப காலத்திலேயே அடையாளம் கண்டு விளம்பரங்களில் நடிக்க வைத்தேன். அஜித் சாரோடு எனக்கு நல்ல பழக்கம் இருக்கிறது. ஆனால் அவருக்கு விளம்பரங்களில் நடிக்க ஈடுபாடு இல்லை. நல்ல மனிதர் அவர். என்னுடைய விளம்பரங்கள் குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். விளம்பரங்களிலேயே அதிக நேரம் ஈடுபடுவதால் குடும்பத்தினரோடு அதிகம் நேரம் செலவிட முடியாது.

Advertisment

கர்நாடகாவில் படையப்பா பட ஷூட்டிங்கின் போது வாட்டாள் நாகராஜ் கும்பல் ரஜினி சாரைத் தாக்க முயற்சித்தது. அப்போது நான் அவரை அருகிலிருந்து பாதுகாத்தேன். அன்று என்னுடைய செயலால் அவர் மிகவும் மனம் நெகிழ்ந்து எனக்கு முத்தமிட்டார். சிட்டிசன் படத்தில் நடித்தபோது அஜித் சார் தோளில் கைபோட்டு நண்பர் போல பழகுவார். சினிமா இயக்க வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது. அதற்கான கதைகளும் வைத்திருக்கிறேன். விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்.