Advertisment

திரையுலக பாலியல் குற்றங்கள் - தனுஷ் பட நடிகை வேதனை

actress swara bhasker about kerala hema committee report

மலையாளத் திரையுலகில் பெண்களுக்கு நடந்த பாலியல் குற்றங்கள் பற்றிய ஹேமா கமிஷன் ஆய்வறிக்கை வெளியாகி திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் பாலியல் கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்வலையை உருவாக்கியது. இந்த சம்பவத்தை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் மற்றும் வேலை செய்யும் அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ஆம் ஆண்டு கேரள அரசு கமிஷன் அமைத்தது.

Advertisment

இந்த கமிஷன் 2019ஆம் ஆண்டு கேரள முதல்வரிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை பற்றி புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் மீது நடிகை ஸ்ரீ லேகா மித்ரா புகார் தெரிவித்தார். இந்த புகாரை ரஞ்சித் மறுத்திருக்க, தனது சினிமா அகடாமி தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். பின்பு ஸ்ரீ லேகாவின் புகாரின் அடிப்படையில் அவர்மீது வழக்குப்பதிவு செய்து கொச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இதே போல் நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் கான் மீது நடிகை ரேவதி சம்பத் புகார் அளித்திருந்தார், இந்த புகாரை இருவரும் மறுத்திருக்க, தனது நடிகர் சங்க பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பதவி விலகினார் சித்திக். அதைத் தொடர்ந்து அவர் மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. முகேஷ் மற்றும் மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது நடிகை மினுமுனீர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரையடுத்து கேரள அரசின் குழுவில் இருந்து எம்.எல்.ஏ. முகேஷ் நீக்கப்பட்டார். இதனிடையே தொடர்ந்து பாலியல் புகாரில் மலையாள சங்க நிர்வாகிகள் சிக்கியுள்ள நிலையில், அதற்கு தார்மீக பொறுப்பேற்று மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன் லால் உட்பட 17 செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

ஹேமா கமிட்டிக்கு ஆதரவாக பிரித்விராஜ், பார்வதி திருவோத்து உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷூடன் அம்பிகாபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வரா பாஸ்கரும் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி படித்தேன். திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்துதலுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் வுமன் இன் சினிமா கலெக்டிவ் (Women In Cinema Collective) அமைப்பினர் துணிச்சலாக செயல்பட்டு வருகின்றனர். அந்த துணிச்சலுக்கு நன்றி. அவர்கள் வெளியிட்ட அறிக்கை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதலளித்திருக்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யவேண்டிய வேலையை நீங்கள் செய்துள்ளீர்கள். நீங்கள்தான் ஹீரோக்கள்” என்று பாராட்டியுள்ளார். மேலும் அந்த அறிக்கையை படிக்கும்போது மனவேதனை அளிப்பதாகவும் திரைத்துறை ஆண்களை மையப்படுத்தி நடந்து வரும் தொழிலாகவும், ஆணாதிக்க அமைப்பாகவும் இருக்கிறதாக குறிப்பிட்டுள்ளார்.

Bollywood Actress Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe