Skip to main content

”கையில் துப்பாக்கி இருந்தால் அங்கேயே அவர்களை சுட்டுவிடுவேன்” - சோனியா அகர்வால் அதிருப்தி

Published on 26/05/2022 | Edited on 26/05/2022

 

Sonia Agarwal

 

அறிமுக இயக்குனர் ஷிஜின்லால் எஸ்எஸ் இயக்கத்தில் சோனியா அகர்வால், விமலா ராமன், சர்மிளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கிராண்மா. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

 

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சோனியா அகர்வாலிடம் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்துவருவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சோனியா அகர்வால், “அத்தகைய செய்திகளைப் பார்க்கையில் நான் ரொம்பவும் எமோஷனலாகிவிடுவேன். உலகம் எங்கே போகிறது என்பதை பார்க்கும்போது ரொம்பவும் வருத்தமாக உள்ளது. நம் எல்லோருக்குமே குழந்தை உள்ளது. எனக்கு குழந்தை இல்லாவிட்டாலும்கூட என்னுடைய குடும்பத்தில் குழந்தைகள் உள்ளன. எப்படி குழந்தைகளுக்கு எதிராக இப்படி யோசிக்கிறார்கள், இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதே புரியவில்லை. என் கையில் துப்பாக்கி இருந்தால் அங்கேயே அவர்களை சுட்டுவிடுவேன். அதேநேரத்தில் சட்டத்தை மீறியும் நாம் செயல்பட முடியாது” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கோவில் படத்திற்குப் பிறகு கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” - சோனியா அகர்வால்

Published on 20/09/2023 | Edited on 21/09/2023

 

sonia agarwal in seeran press meet

 

ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா நடிப்பில் துரை கே. முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  'சீரன்'. மேலும் ஆடுகளம் நரேன், அருந்ததி நாயர், செண்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் நிலையில், படத்தின் ஹீரோ ஜேம்ஸ் கார்த்திக் தயாரித்துள்ளார். அவர் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், விரைவில் படத்தைத் திரைக்குக் கொண்டு வரும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

 

அப்போது தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக் பேசியதாவது, "இந்தப் படம் எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு. தயாரிப்பிலும் நடிப்பிலும் இந்தப் படத்தில் நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்த சோனியா அகர்வால், நரேன் மற்றும் இனியா அவர்களுக்கு நன்றி. மேலும் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றி. இயக்குநர் எனக்கு மிகச்சிறந்த நண்பர். அவருடன் இணைந்து பல படங்கள் செய்ய நினைக்கிறேன். எனக்கும் அவருக்கும் சில வாக்குவாதம் இருக்கும் ஆனால் அது படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது. அவரிடம் பல விஷயங்கள் நான் கற்றுக் கொண்டேன். தயாரிப்பாளருக்கு 1 ரூபாய் கூட நஷ்டம் வரக்கூடாது என்று நினைப்பவர் இயக்குநர். நான் என் சிறு வயதில் பார்த்த விஷயங்களை இந்தப் படத்தில் கொண்டு வர முயற்சி செய்துள்ளோம்" என்றார். 

 

இயக்குநர் துரை கே. முருகன் பேசியதாவது, "நான் இந்த இடத்தில் இருப்பதற்குக் காரணம் என் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கார்த்திக். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது. அவர் சொன்னதைக் கேட்டபோது, என் சிறு வயதில் என் தாத்தா, எத்தனை ஜாதி வெறியுடன் இருந்துள்ளார் என்ற ஞாபகமும் மிகப்பெரும் கோபமும் வந்தது. அதனை அழுத்தமாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம். இந்தப் படத்தில் இனியா மற்றும் சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவர்களுக்குக் கண்டிப்பாக இந்தப் படம் ஒரு மிகப்பெரிய பெயர் வாங்கித் தரும். கதாநாயகன் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் ஒட்டுமொத்த உணர்வையும் கொடுத்து, சமூக கருத்தையும் பதிவு செய்யும்" என்றார். 

 

இனியா பேசியதாவது, "இந்தப் படத்தில் பூங்கோதை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்திற்காக எடை கூட்டிக் குறைத்து நடித்துள்ளேன். நான் இப்படி நடித்தது இதுவே முதல் முறை. கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக் படத்தின் பாடல் காட்சிகளில் நடிக்கும் போது சிறப்பாக நடித்துள்ளார். அவர் ஒரு திறமையான தயாரிப்பாளர் மற்றும் நல்ல நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கிறேன். நான் இவரைப் பார்த்து சில தயாரிப்பு பணிகளும் மேற்கொள்ள உள்ளேன். இயக்குநர் மிகவும் பக்குவம் நிறைந்தவர். அவருக்குத் தேவையானது என்ன என்பதில் தெளிவாக இருந்தார். பல பிரச்சனை நடந்தாலும் எந்த விஷயங்களும் படத்தைப் பாதிக்காதவாறு இந்தப் படத்தை அருமையாக உருவாக்கியுள்ளார்" என்றார்.

 

சோனியா அகர்வால் பேசியதாவது, "இந்தப் படம் ஒரு சமூக அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனக்கு இதன் கதை மிகவும் பிடித்திருந்தது. கோவில் படத்திற்குப் பிறகு கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். தயாரிப்பாளர் மிகவும் சிறப்பாகத் தனது பணியைச் செய்துள்ளார். மேலும் அவரது கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கண்டிப்பாக இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறும். இயக்குநர் ஃபாஸ்டாக வேலை செய்வார். ஆனால் கச்சிதமாக காட்சிகளை உருவாக்கிவிடுவார். படத்தை நன்றாக எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர். மிகவும் பொறுமைசாலி அருமையாகக் காட்சியைப் படமாக்கியுள்ளார்" என்றார். 

 

 

Next Story

"சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்..." எச்சரித்த சோனியா அகர்வால்!

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

Sonia Agarwal
                                  கைது செய்யப்பட்ட சோனியா அகர்வால்

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், நடிகை ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், தொழிலதிபர் பரத் மற்றும் நடிகையும் மாடலுமான சோனியா அகர்வால் வீட்டில் நேற்று சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

இது தொடர்பான செய்தியை வெளியிட்ட சில இணைய ஊடகங்கள், கன்னட நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படத்திற்கு பதிலாக 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படத்தை வெளியிட்டன. இந்தச் செய்தி வெளியாகி திரைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலரும் நடிகை சோனியா அகர்வாலை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகிவரும் கிரான்ட்மா படப்பிடிப்பில் பிஸியாக நடித்துவரும் சோனியா அகர்வால் இத்தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

 

இந்த நிலையில், முறையாக விசாரிக்காமல் இது குறித்து செய்தி வெளியிட்ட ஊடங்களை நடிகை சோனியா அகர்வால் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த விவகாரத்தில் உண்மையை அறியாமல் செய்திவெளியிட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் செய்தியாளர்கள் மீது நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். காலை முதல் தொடர்ச்சியாக வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் எனக்கும் என் குடும்பத்திற்கும் அதிர்ச்சியையும் பெருந்துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார்.