Skip to main content

”உனக்கு என்ன வேணும்னு சிவாஜி கேட்டார்; நான் சொன்ன பதில அவர் கடைசிவரை மறக்கல” - எஸ்.என்.பார்வதி நெகிழ்ச்சி

Published on 27/05/2022 | Edited on 30/05/2022

 

SN Parvathy

 

தமிழின் மூத்த பழம்பெரும் நடிகையான எஸ்.என்.பார்வதி, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த சீரியலுக்கான ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், சிவாஜி கணேசன் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

”இமயம் பட ஷூட்டிங்கின் போது சிவாஜி அண்ணனுக்கு என் கையாலே சமைத்துக் கொடுத்திருக்கிறேன். ஒரு சகோதரியாக சகோதரனுக்கு சமைத்துக் கொடுத்ததில் எனக்கு ரொம்பவும் சந்தோசம். அவருடன் இணைந்து நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். கலாட்டா கல்யாணம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது கணேசன் அண்ணனோடு இணைந்து நடிக்க வேண்டும் என்பதை நினைத்து ரொம்பவும் பயமாக இருந்தது. ஸ்பாட்டில் என்னைப் பார்த்ததும், நீதான் நடிக்கிறீயா, டயலாக் மனப்பாடம் பண்ணிட்டீயா என்று கேட்டார். அவர் கேட்டதும் பயத்தில் எனக்கு வார்த்தையே வரவில்லை. தலையை மட்டும் ஆட்டினேன். படத்தில் ஒரு டயலாக் வரும், இவ்வளவு பேசுறீயே உனக்கு என்ன வேணும் என சிவாஜி கேட்க, என்ன பெருசா கேட்பேன்... சிங்கிள் சாயா கேட்பேன் என்று நான் சொல்வேன். அன்றிலிருந்து அவர் இறக்கும்வரை என்னை சாயா என்றுதான் அழைப்பார். அவர் குடும்பத்தில் உள்ள எல்லோருமே என்னை சாயா என்றுதான் அழைப்பார்கள். 

 

சிவாஜி அண்ணன் மறைந்த அன்று நான் நேரில் சென்றிருந்தேன். பிரபு தம்பியை கட்டிப்பிடித்து ’இமையமே சரிஞ்சிருச்சேபா’ என அழுதேன். ஒன்னுமில்ல அத்தை உள்ள போங்க என்றார். என்னை பார்த்ததும் சிவாஜி அண்ணன் மனைவி, இனி யாருப்பா உன்னை சாயானு கூப்பிடுவா என்று அழுதார். அவர் மரணமடைந்தது என்னை ரொம்பவும் மனமுடைய வைத்தது. சமீபத்தில் சிவாஜி அண்ணன் வீட்டிலிருந்து 5 பேருக்கு பொற்கிழி கொடுத்தார்கள். எங்க அப்பாக்கு ரொம்பவும் பிடிச்ச தங்கச்சி என்று கூறி அவரது மகன் எனக்கும் கொடுத்தார். சிவாஜி அண்ணன் பற்றி பேசினால் இப்போதும் எனக்கு கண்கலங்கிவிடும்".

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சிவாஜி கணேசனின் புகழ் தரணியும் தமிழும் உள்ளவரை நிலைத்திருக்கும்” - முதல்வர் புகழாரம்

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

Shivaji Ganesan's fame will last as long as Tharani and Tamil exist says CM

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96 ஆவது பிறந்த தினம் இன்று. இதனைக் கொண்டாடும் விதமாகச் சென்னை அடையாறு பகுதியில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இன்று காலை முதல் நடிகர் சிவாஜியின் படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். அதேபோல் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களை அனல் பறக்கத் தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த நடிகர் திலகம் அவர்களின் 96 ஆவது பிறந்தநாள் இன்று. நடிப்பின் இமயமாய், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ், தரணியும் தமிழும் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

சிவாஜி கணேசனின் 96 வது பிறந்தநாள்; மலர்தூவி முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96 ஆவது பிறந்தநாள் இன்று. இதனைக் கொண்டாடும் விதமாக சென்னை அடையாறு பகுதியில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நடிகர் சிவாஜியின் படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இதில் சிவாஜி கணேசனின் குடும்பத்தார், உறவினர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.