ADVERTISEMENT

”என் தலையில் கை வைத்து எம்.ஜி.ஆர். கேட்ட கேள்வி” - முதல் சந்திப்பு குறித்து நெகிழும் எஸ்.என்.பார்வதி 

12:38 PM May 27, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழின் மூத்த பழம்பெரும் நடிகையான எஸ்.என்.பார்வதி, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அந்த சீரியலுக்கான ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், எம்.ஜி.ஆர். குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

”நாம் மட்டும் நல்லா இருந்தா போதாது. எல்லோரும் நல்லா இருக்கவேண்டும் என்ற பரந்த மனது கொண்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர் கடவுள் எங்களுக்கு கொடுத்த கிப்ட். அதை இவ்வளவு சீக்கிரம் கடவுள் எடுத்துக்கொள்வார் என்று நாங்கள் நினைக்கவேயில்லை. அவரது இழப்பு கலையுலகத்திற்கே பெரிய இழப்பு. எனக்கு ஸ்பிரிங் தலை பார்வதி என்று பெயர் வைத்தார்.

வந்தவாசியில் புரட்சித்தலைவர் தலைமையில் நடந்த நாடகத்தில் நானும் நடித்தேன். பல ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமாக நாடகக்கொட்டை அமைத்திருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். எம்.ஜி.ஆர். வந்தவுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக முந்தியடித்து அங்கு வைக்கப்பட்டிருந்த தட்டியையெல்லாம் பிய்த்து எறிந்துவிட்டார்கள். அப்போதுதான் அவரை முதன்முதலாக நேரில் பார்த்தேன். அந்த நாடகத்தில் ஒருவித பயத்துடனே நடித்தேன். இடைவேளை நேரத்தில், புரட்சித்தலைவர் ’தலையை வெடுக்கு வெடுக்குனு ஆட்டிக்கிட்டே பேசுச்சே அந்த அம்மாவா கூப்பிடுங்க’ என்றார். அவர் கூப்பிடுகிறார் என்றதும் எனக்கு கையெல்லாம் உதறல் எடுக்க ஆரம்பித்தது. எதுவும் தவறு செய்துவிட்டோமா, மேக்கப் எல்லாம் சரியாக இருக்கிறதா என்றெல்லாம் பார்த்துவிட்டு அவரைப் பார்க்க மேலே போனேன். அண்ணே வணக்கம் என்றேன். இங்க பக்கத்துல வா என்றார். பக்கத்தில் சென்றதும் என் தலையில் கை வைத்து இது தலையா இல்லை ஸ்பிரிங்கா என்றார். பாரட்டத்தான் நம்மை அழைத்திருக்கிறார் என்று தெரிந்த பிறகுதான் எனக்கு நிம்மதியே வந்தது.

அதே மாதிரி செஞ்சுக்காட்டு என்றார். மேடையில் ஒரு வேகத்தில் செய்ததால், தனியாக செய்யமுடியவில்லை. இனி உன் பெயர் ஸ்பிரிங் தலை பார்வதி என்றார். என் தலையில் கைவைத்து அவர் பாராட்டியது மிகப்பெரிய ஆசீர்வாதம்”.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT