
‘ஒரு அடார் லவ்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஓமர் லுலு, ‘நல்ல சமயம்’ என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்துள்ளார். இப்படம் வருகிற 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. அந்த வகையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா கேரளா, கோழிகோட்டில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக நடிகை ஷகிலா அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், வணிக வளாகம் அவருக்கு அனுமதி மறுத்துவிட்டது. மேலும் ஷகிலா இல்லாமல் விழாவை நடத்தி கொள்ளும்படி வணிக வளாகம் தரப்பு சொல்ல, ஷகிலா இல்லாமல் விழா நடைபெறாது என முடிவெடுத்து விழாவை ரத்து செய்தது படக்குழு. இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து ஷகிலா கூறுகையில், "இது எனக்குப் புதிதல்ல. இதுபோன்று அவமானங்களை பலமுறை சந்தித்துள்ளேன். என்னை ஏற்கமறுப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை" என்றார். இதற்கு வணிக வளாகம், பாதுகாப்பு காரணங்களுக்காகவே அப்படிச் செய்யப்பட்டது" என விளக்கம் அளித்துள்ளனர்.