Advertisment

“நம் நாட்டை நினைத்து வெட்கப்படுகிறேன்” - கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட சதா

80

நாடு முழுவதும் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாய் கடியினால் உருவாகும் ரேபிஸ் வைரஸ் மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தெருநாய்க்கடி அதிகமாக இருக்கிறது. இதனால் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது. மேலும் டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் இருக்கும் தெரு நாய்களை 8 வாரங்களில் பிடிக்க கெடு விதித்தது. 

Advertisment

இந்த உத்தரவு நாய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆறுதலளிக்கும் விதமாக இருந்தாலும் நாய் விரும்பிகளுக்கு மத்தியில் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்த உத்தரவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நடிகை சதா, இந்த உத்தரவு நாய்களை பெருமளவில் கொல்லும் நோக்கில் அமையும் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், “சமீபத்தில் ஒரு பெண் ரேபிஸ் நோயால் இறந்தார். இதனால் சுமார் மூன்று லட்சம் நாய்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது. அப்படி இல்லையென்றால் அந்த் நாய்கள் கொல்லப்படும். இந்த நாய்கள் அனைத்திற்கும் காப்பகங்களை உருவாக்குவதற்கு நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் போதுமானதாக இருக்காது. அது போக இவ்வளவு குறுகிய காலத்தில் காப்பகங்களை ஏற்பாடு செய்வது சாத்தியமற்றது. இந்த நடவடிக்கை மேற்கொண்டால் நாய்கள் பெருமளவில் கொல்லப்படும் சூழல் உருவாகும்.  

Advertisment

தற்போதைய நிலைமைக்கு அரசாங்கமும் உள்ளாட்சி அமைப்புகளும் தான் காரணம். அவர்கள் தான் நாய்களுக்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யாமல் விட்டுவிட்டனர். விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு திட்டம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அந்த திட்டத்திற்கு சரியான பட்ஜெட் ஒதுக்கப்பட்டு திறம்பட செயல்படுத்தப்பட்டிருந்தால், இன்று நாம் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டோம். என்ன செய்வது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. எந்த அதிகாரிகளை அணுகுவது, எங்கு சென்று போராடுவது எனத் தெரியவில்லை. ஆனால் நான் சொல்லக்கூடியது ஒன்றுதான். இந்த உத்தரவு என்னை மனரீதியாக கொல்கிறது. இது சரியான நடைமுறையே கிடையாது. நம் நாட்டை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். நம்மை சுற்றி இருப்பவரை நினைத்தும் இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன் ஒன்றுக்கு இருமுறை யோசிக்காதவர்களை நினைத்தும் வெட்கப்படுகிறேன். தயவுசெய்து இந்த உத்தரவைத் திரும்பப் பெறுங்கள்” என்றுள்ளார்.  

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான 'ஜெயம்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் நடிகை சதா. பின்பு விக்ரமின் 'அந்நியன்', அஜித்தின் 'திருப்பதி', உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின்பு தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வந்த சதா கடைசியாக 2018 இல் வெளியான 'டார்ச்லைட்' படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை. இப்போது வனவிலங்கு புகைப்படக்கலைஞராக இருந்து வருகிறார்.

sadha Supreme Court Dogs
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe