radha

சென்னை சாலிகிராமம் லோகையா தெருவைச் சேர்ந்தவர் ராதா (39). சினிமா நடிகையான இவர், சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள நிலையில், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்று தனியாக வாழ்ந்து வந்தார்.

Advertisment

இந்த நிலையில், ராதாவிற்கு எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த வசந்தராஜா என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நட்பு காதலாக மாற இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வசந்த ராஜாவிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனையடுத்து, வசந்தராஜா நடிகை ராதாவுடன் கடந்த ஓராண்டாக சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு வசந்தராஜாவுக்கும் ராதாவுக்கும் இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், நடிகை ராதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு வசந்தராஜா அவரை அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தன்னை அடித்துத் துன்புறுத்தும் வசந்த ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நடிகை ராதா அளித்த புகாரின்பேரில் வசந்த ராஜாவிடம் விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.