கர்நாடக முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காபி டே நிறுவனத்தின் உரிமையாளருமான சித்தார்த் 30ஆம் தேதி திடீரென மாயமான நிலையில் நேற்று காலை அவரது உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனமுடைந்த அவர் நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காபி டே நிறுவனத்தின் தற்காலிக தலைவராக எஸ்.வி.ரங்கநாத் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி வந்த இவர், தற்போது தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக நிதின் பக்மானே நியமிக்கப்பட்டுள்ளார். காபி டே நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் வரும் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பல பிரபலங்கள் சிசிடி மெமரீஸ் என்று காபி டேவில் தங்களுக்கு நடைபெற்ற மறக்கமுடியாத நினைவுகளை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். நடிகை ப்ரனிதா சுபாஷ், “பெங்களூருவில் வளர்ந்தபோது, சில சிசிடிகள் நினைவிலிருந்து எடுக்க முடியாத அளவிற்கு மனதிற்கு நெறுக்கமானவை. குறிப்பாக பள்ளி உயர்கல்வி படிக்கும்போது 14 வயதில் என்னுடைய முதல் டேட்டிற்காக 50 ரூபாய் செலவு செய்து கேப்பச்சினோ வாங்கினேன். அப்போது எனக்கு கொடுக்கப்படும் பாக்கெட் மணியில் லிமிட்டாக வாங்க கூடிய ஒன்றாக இருந்தது. இப்பொழுதும் நான் எங்கையவது ரோட் ஜார்னி செய்தால் சிறிது பிரேக் எடுத்துக்கொள்ள வழியில் ஏதாவது ஒரு சிசிடி இருக்க வேண்டும் என்று பிரே செய்துகொள்வேன்”என்று பதிவிட்டுள்ளார்.