Skip to main content

’இதை வெளியே சொல்லக்கூடாது’ - ஜெயலலிதா போட்ட கண்டிஷனால் வீட்டுக்குள் முடங்கிய நளினி 

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

Actress Nalini

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நடிகையாக வலம்வந்த நளினியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான நெருக்கம்  மற்றும் அவருடைய முன்னாள் கணவரான நடிகர் ராமராஜனுக்கு எம்.பி. சீட் வழங்கியது குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

”ஜெயலலிதா அம்மா எனக்கு ரொம்பவும் நெருக்கம். என்னிடம் குழந்தை மாதிரியே பழகுவார். என்னுடைய குழந்தைகளுக்கு புத்தகம் பிடிக்கும் என்பதால் நிறைய புத்தகங்கள் கொடுத்திருக்கிறார். அவரை வெளியே இருந்து வேறு ஒரு ஆளாகவும் பார்த்திருக்கிறேன், அருகே இருந்து அவரது குழந்தைத்தனத்தையும் ரசித்திருக்கிறேன். 

 

டிசம்பர் 6ஆம் தேதி போயர் கார்டனில் இருந்து வந்த ஒரு போன்கால் அழைப்பை என்னால் மறக்கவே முடியாது. திடீரென போன் செய்து உடனே கிளம்பி வாருங்கள் என்றார்கள். என்னுடைய முன்னாள் கணவர் ராமராஜன் அப்போது வீட்டில் இல்லை. அவருக்கும் தகவல் சொல்லிவிட்டு ஜெயலலிதாவிற்கு பிடித்த ஸ்வீட்ஸ்களை வாங்கிக்கொண்டு போயஸ்கார்டன் சென்றோம். அந்த சமயத்தில் எங்களுக்கு நிறைய பிரச்சனை இருந்தது. தியேட்டர்களை மூடிவிட்டதால் பெரும்பொருளாதார நெருக்கடி இருந்தது. அதனால் எங்களுக்கு ஏதாவது உதவி பண்ண முடியுமா என்று அவரிடமே சில முறை கேட்டிருக்கிறேன். ஒருவேளை அதற்காகத்தான் அழைக்கிறாரோ என்ற குழப்பத்தோடே சென்றோம். ஒருமுறையாவது போயஸ்கார்டனை நான் பார்க்க வேண்டும் என்று கூறி என் முன்னாள் கணவரின் தாய்மாமாவும் எங்களோடு வந்தார். 

 

உள்ளே போனதும் ஜெயலலிதா அம்மாவிடம் ஸ்வீட்ஸ் கொடுத்தேன். ஓ... நீ எனக்கு ஸ்வீட் கொடுக்குறீயா, நானும் உனக்கு ஒரு ஸ்வீட்டான விஷயம் சொல்லப்போறேன் என்றார். ஒருவேளை கடனையெல்லாம் நான் அடைச்சிறேன் என்று சொல்லப்போறாரோ என்று படபடப்பாக யோசித்துக்கொண்டிருந்தேன். உங்க வீட்டுக்காரரை திருச்செந்தூர் தொகுதி எம்.பி.யாக்க போறேன் என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னுடைய வீட்டுக்காரரும் எதுவும் புரியாமல் முழித்தார். என்னமா சொல்றீங்க என்றேன். நான் முடிவெடுத்துட்டேன், நீங்கதான் திருச்செந்தூர் தொகுதி எம்.பி. என்றார். எனக்கு கண்களெல்லாம் கலங்கிவிட்டன. இந்த விஷயத்தை நான் அடுத்த மாத இறுதியில் அறிவிப்பேன். அதுவரை யாருக்கும் தெரியக்கூடாது. யாருக்காவது தெரிந்தால் சீட் தரமாட்டேன் என்றார்.

 

சந்தோஷத்தில் எங்கள் முகமெல்லாம் மாறிவிட்டது. காரில் திரும்பிவரும்போது உள்ளே என்ன பேசுனீங்க, ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு என்று அவருடைய தாய்மாமா எங்களிடம் கேட்டுக்கொண்டே வந்தார். நானும் என் வீட்டுக்காரரும் ஒன்னுமில்லை என்று சொல்லி சமாளித்தோம். யாரிடமும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக அடுத்த ஒரு மாதத்திற்கு நாங்கள் இருவருமே எங்கும் செல்லவில்லை. பின், தேர்தல் நேரத்தில் ஏதாவது பணம் போதவில்லை என்று சொன்னால் நீ ஏன் கவலைப்படுற, நான் பார்த்துக்குறேன் என்று சொல்லி அவரை ஜெயிக்கவைத்து எம்.பி.யாக்கி அழகுபார்த்தார். எங்களுக்கு அவர் வாழ்க்கை கொடுத்தார் என்றே சொல்லலாம்.

 

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நான், விஜயசாந்தி, அவருடைய பி.ஏ. மூவரும் விமானத்தில் சென்று கொண்டிருந்தோம். அப்போது திடீரென அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. எனக்கு தலைசுற்றி அப்படியே உட்கார்ந்துவிட்டேன். பின்னர்தான், அது பொய் செய்தி என்று தெரிந்தது. பின், சில நாட்கள் கழித்து ஹைதராபாத்தில் வாராங்கல் வனப்பகுதியில் ஷூட் செய்துகொண்டிருந்தோம். அப்போதுதான் அவர் இறந்த செய்தி எங்களுக்கு வந்தது. ஒருநாள் முழுவதும் அப்செட்டாகவே இருந்தேன். அவர் இறந்துவிட்டதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவர் என்னோடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்”.

 

 

சார்ந்த செய்திகள்