Advertisment

"இதனால்தான் எம்.ஜி.ஆரை இன்றும் கொண்டாடுகின்றனர்..." நடிகை லதா ஜாலி பேட்டி!

latha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் லதா. எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள இவர், 1973இல் வெளியான எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் மூலம் திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். ஏறக்குறைய 48 ஆண்டுகள் திரைப்பயணத்தை நிறைவுசெய்துள்ள லதா, தற்போது சீரியல்களில் பிஸியாக நடித்துவருகிறார். இந்தச் சூழலில், நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் நடிகை லதாவை சந்தித்து உரையாடினோம். அந்தச் சந்திப்பில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

Advertisment

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் மூலமாக திரைத்துறைக்குள் வந்தீர்கள். 48 ஆண்டுகால திரைப்பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது என்ன மாதிரியான உணர்வு ஏற்படுகிறது?

Advertisment

48 ஆண்டுகள் என்பது மிக நீண்ட பயணம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மாற்றம் ஒன்றே மாறாதது, கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பார்கள். நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்காமல், புதுப்புது விஷயங்களைத் தினமும் கற்றுக்கொண்டே இருந்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் சினிமாவிற்கு வருவேன் என்றே எதிர்பார்க்கவில்லை. ஸ்கூல் ட்ராமாக்காக எடுத்த ஒரு ஸ்டில் எம்.ஜி.ஆர் பார்வைக்கு சென்றுவிட்டது. அவர் படத்திற்கு கதாநாயகி வேண்டும் என்றவுடன் மனோகர் சார் மூலமாக என்னை அணுகினார்கள். அப்போது எனக்கு 15 வயதுதான் என்பதால் எங்கள் அம்மாவிற்கு விருப்பமில்லை. எம்.ஜி.ஆர் படம் என்றவுடன் எனக்கு நடிக்கும் ஆசை வந்துவிட்டது. நான் ஆர்வமாக இருந்ததால், என் அம்மாவிடம் பேசி எம்.ஜி.ஆர் சம்மதம் வாங்கினார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்தான் என்னுடைய குரு. என்னுடைய வெற்றிக்கும் அவர்தான் காரணம். நான் நடிப்பு கற்றதே எம்.ஜி.ஆர் பிக்சர்ஸில்தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் நடித்துள்ளேன். தற்போது சீரியலிலும் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் மக்கள் திலகத்திற்கு வாள் சண்டை கற்றுக்கொடுத்தீர்கள். வாள் சண்டையில் அவர் மன்னாதி மன்னன். அவருக்கு கற்றுக்கொடுத்த அனுபவம் எப்படி இருந்தது?

செய்வன திருந்தச் செய் என்பார்கள். எனக்கு வாள் சண்டை பற்றியெல்லாம் தெரியாது. ஷ்யாம் சுந்தர் மாஸ்டர்தான் அதோட பேஸிக் கற்றுக்கொடுத்தார். ரெண்டு நாள் பயிற்சி எடுத்தேன். அதைப் பண்ணும்போது எம்.ஜி.ஆரும் ரொம்ப என்கரேஜ் பண்ணார். சில தினங்களுக்கு முன்னால்கூட ஒருவர் அந்தக் காட்சியை வாட்ஸ்அப்பில் எனக்கு அனுப்பியிருந்தார்.

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் நடித்த அனுபவம் பற்றி கூறுங்கள்?

முதல் படத்திலேயே எம்.ஜி.ஆருடன் நடித்துவிட்டதால் மற்றவர்களுடன் நடிப்பது எனக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ரஜினி, கமல் நடிகர்களாக வளர்ந்துவந்த நேரத்தில் நான் பெரிய ஹீரோயினாக இருந்தேன்.முதல்நாள் படப்பிடிப்பில் ரஜினி முகத்தில் ஒரு பரபரப்பு இருந்தது. அவர் அப்படித்தான்போல என்று நினைத்தேன். இரண்டு நாள் கழித்து ‘ஹலோ லதாஜி’ என்றார். நானும் வணக்கம் சொல்லிவிட்டு அவரை உட்காரச் சொன்னேன். நான் ரொம்ப டெரரான ஆள் என்று அவரிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள். அதை என்னிடம் கூறிய ரஜினி, ‘நீங்க ரொம்பவும் இயல்பா இருக்கீங்களே’ என்றார். அன்றிலிருந்து இன்றுவரை எங்களுக்கிடையே நல்ல நட்பு உள்ளது. அவர் வீட்டில் ஏதாவது நிகழ்ச்சி என்றால் என்னைக் கூப்பிடுவார்கள். என் வீட்டில் ஏதாவது நிகழ்ச்சி என்றால் அவர் வருவார். இவ்வளவு பெரிய உலகப் புகழ்பெற்ற நடிகரான பிறகும், அவரது நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை. அதுதான் அவரிடம் எனக்குப் பிடித்த விஷயமே.

கமல்ஹாசனுக்கு தெரியாத டெக்னாலாஜியே கிடையாது. எல்லாம் தெரிந்த சகலகலா வல்லவன் அவர்.‘நீயா’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். ரொம்ப டெடிகேஷன் உள்ள சிறந்த ஆர்ட்டிஸ்ட்.

‘சித்தி’ சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது... அதுபற்றி கூறுங்கள்.

ராதிகா அம்மாவும் நானும் நெருங்கிய நண்பர்கள். ‘சித்தி’ சீரியலில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று ராதிகா கூறினார். ‘சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன்... நீ சீரியலில் நடிக்க சொல்றியே’ என்றேன். ‘நல்ல கேரக்டர்... நீங்க பண்ணுங்க, நல்லா இருக்கும்’ என்றார். அதில் நடித்த பிறகுதான் சீரியலின் தாக்கம் என்ன என்பது எனக்குப் புரிந்தது. சினிமா என்றால் தியேட்டரில் பார்க்கிறோம். ஆனால், சீரியல் என்று வரும்போது வீட்டில் குடும்பமாக உட்கார்ந்து... குறிப்பாக பெண்கள் பார்க்கிறார்கள். சீரியல் மூலமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் வீடுகளைச் சென்றடைய முடிகிறது. எங்கே வெளியே சென்றாலும் சீரியலைக் குறிப்பிட்டு நிறைய பாராட்டுகள் கிடைக்கின்றன.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பிறகு எத்தனையோ நடிகர்கள் வந்துவிட்டாலும், அவர் பெயர் மட்டும் மக்கள் மனதில் பச்சை குத்தியதுபோல பதிந்துள்ளது. அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்ற வரிகளுக்கு உதாரணமாக வாழ்ந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். செட்டுல எல்லாரையும் கவனிப்பார். யாராவது சோகமாக இருந்தால், அழைத்து என்ன விஷயமென்று கேட்பார். ஏதாவது பணப் பிரச்சனை என்று கூறினால், ‘ஏன் என்னிடம் கேட்க மாட்டியா’ என்று கூறி உடனே பணம் கொடுத்து உதவுவார். லைட்மேன் மாதிரியான பல தொழிலாளர்களுக்கு அவர் உதவி செய்ததை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் மனிதநேயம். அனைவரிடமும் வாங்க.. போங்க என்று மரியாதையாக பேச வேண்டும் என்று எனக்கு அறிவுரை எல்லாம் கூறியிருக்கிறார்.

actress latha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe