
உலகம் முழுவதும், மிகவும் பிரபலமான டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். ஹிந்தியில் 14 சீஸன் வரை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து மற்ற இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
தமிழில் அக்டோபர் நான்காம் தேதி முதல் நான்காவது சீஸன் ஒளிபரப்பாகவுள்ளது. முன்னதாக மூன்று சீஸன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன்தான் இந்த சீஸனையும் தொகுத்து வழங்குகிறார்.
தினசரி, பிக்பாஸ் தமிழில் யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்று பல வதந்திகள் பரவி வருகின்றன. நாளை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் அந்த பதினான்கு பேர் யார் என்பது தெரிந்துவிடும்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி போட்டியாளர் என்று தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''இந்தத் தருணத்தில் ஒரு உண்மையைச் சொல்கிறேன். நான் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. கையில் பாப்கார்னுடன் நானும் உங்களைப் போல்தான் ஷோவை பார்க்க போகிறேன். என்னை நடிக்க அழைப்பவர்களுக்கு நான் சொல்வது, உள்ளேன் அய்யா'' என்று குறிப்பிட்டுள்ளார்.