Skip to main content

கரோனா அச்சுறுத்தல்... விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடிகை தேவயானி! 

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

thevayani

 

கரோனா அச்சுறுத்தல் இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டு வருகிறது. இதனால் அரசு, திரையுலக பிரபலங்களை வைத்து கரோனா விழிப்புணர்வு விளம்பரங்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த தேவயானி, அரசு கரோனா விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த நெருக்கடியான கரோனா காலத்தில் எங்களைப் போன்ற கலைஞர்கள் மக்களிடம் பாடலின் மூலமும் குறும்படங்களின் மூலம்  விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொழுது அது மிக வேகமாக அனைவரிடமும் சென்றடைகிறது. இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்த தமிழக முதல்வருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

இந்த விளம்பரப் படத்தில் தேசிய விருதுபெற்ற ஆடுகளம் ஜெயபாலன் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒரு தந்தை மகளுக்கான பாசப்பிணைப்போடு இந்த விளம்பரம் அமைந்திருக்கிறது.

 

பல வருடங்களுக்கு முன்பு "பாரதி" படத்தில் எனக்கு மருமகனாக நடித்து இப்போது "கட்டில்" திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இ.வி.கணேஷ்பாபு இந்த விளம்பரத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார். செழியன் குமாரசாமி தலைமை ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டிருக்கிறார்.

 

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் எனது குடும்பத்தோடு அந்தியூர் அருகிலுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன். இடைப்பட்ட நாட்களில் அரசு அனுமதியோடு சென்னைக்கு வந்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சென்றிருக்கிறேன். கிராமங்களின் வாழ்க்கையை முழுமையாக நான் இப்போது அனுபவித்து வருகிறேன் என்று தான் சொல்ல வேண்டும். இப்போது தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவது. கிராமத்துச் சமையல் செய்வது, குழந்தைகளோடு, கணவனோடு விளையாடுவது, தினமும் இரவு நேரத்தில் என் மூத்த மகள் பகவத்கீதை வாசிக்க அதை நாங்கள் குடும்பத்தோடு கேட்பது, குழந்தைகளுக்கான கல்வி இப்படி வாழ்க்கையின் அர்த்தங்களை முழுமையாகச் செயல்படுத்தி வருகிறோம். 'மகாபாரதம்', 'ராமாயணம்' போன்ற தொடர்கள் தொலைக்காட்சிகளில்  மறு ஒளிபரப்பாகிறது. இதைக் குடும்பத்தோடு பார்த்து மகிழ்ந்து வருகிறோம்.

 

http://onelink.to/nknapp

 

கரோனா வைரஸிடமிருந்து நாமெல்லாம் மீண்டு ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் முழுவீச்சுடன் நான் செயல்படுவேன். நல்ல தரமான படங்களுக்காக, கதாபாத்திரத்துக்காக நான் காத்திருக்கிறேன். நிச்சயமாக தமிழக மக்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன்” என்று கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்