Advertisment

“தண்ணீர் வைத்தால் நாய்களின் கோவம் குறையும்” - நடிகை அம்மு

52

நாடு முழுவதும் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாய் கடியினால் உருவாகும் ரேபிஸ் வைரஸ் மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தெருநாய்க்கடி அதிகமாக இருக்கிறது. இதனால் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது. மேலும் டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் இருக்கும் தெரு நாய்களை 8 வாரங்களில் பிடிக்க கெடு விதித்தது. 

Advertisment

இந்த உத்தரவு நாய்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஆறுதலளிக்கும் விதமாக இருந்தாலும் நாய் விரும்பிகளுக்கு மத்தியில் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்த உத்தரவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகை சதா, இந்த உத்தரவு நாய்களை பெருமளவில் கொல்லும் நோக்கில் அமையும் என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சென்னையில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள், இயக்குநர் வசந்த், நடிகை வினோதினி, நடிகை அம்மு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இயக்குநர் வசந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என சொன்னார் வள்ளலார். மேலும் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார். இந்த பிரபஞ்சம் மனிதர்களுக்கானது மட்டுமில்லை. உயிர்களுக்கானது. அந்த ஒரு மனநிலையில் இருந்து இந்த விஷயத்தை பார்க்க வேண்டும். கண்டிப்பாக நாய்கள் கடிக்கிறது இருக்கிறது. ஆனால் அதற்காக எல்லா நாய்களையும் காப்பகத்தில் அடைப்பது சரியானது கிடையாது. அதை சிந்தித்து பார்க்க வேண்டும். நாய் கடியை தாண்டி தினமும் நிறைய விஷயங்கள் நடக்கிறது. ஒரு புள்ளிவிவரத்தை உங்களுக்கு நான் சொல்கிறேன். தினமும் பாலியல் துன்புறுத்தல்கள் கிட்டத்தட்ட 87 நடக்கிறது, கொலை சம்பவங்கள் 80 நடக்கிறது, சாலை விபத்தில் இறப்பு 462 நடக்கிறது. நாய்கள் கடி சம்பவம் வெறும் 0.15 சதவீதம் தான். இதை நான் வாக்குவாதத்திற்காக சொல்லவில்லை. இதை அன்போடு பார்ப்பதற்காக சொல்லவில்லை. இந்த தெருக்கள் நமக்கும் மட்டும்தானா? முதலில் தெருநாய்கள் என சொல்வதே எனக்கு வருத்தமாக இருக்கிறது. நாய்களை அடைத்து வைப்பது சரியான தீர்வல்ல” என கூறியுள்ளார்.

இதனிடையே நடிகை அம்மு பேசுகையில், “நாய்களை வாயில்லாத ஜீவன் என ஏன் சொல்கிறோம். ஏனென்றால் அதுவால் பேசமுடியவில்லை. நம் நாட்டில் சில பிரச்சனைகள் குறைவாக இருக்கிறது. அதற்கு காரணம் தெரு நாய்கள் தான். ஏனென்றால் நாய்கள் தான் அதை பாதுகாக்கிறது. அது இருப்பதால் தான் நாம் தைரியமாக சாலையில் செல்கிறோம். நாய்களுக்கு பசி இருப்பதனால் தான் மனிதர்களை வந்து கடிக்கிறது. ரேபிஸ் நோயை தடுப்பதற்கு நாய்களுக்கு சாப்பாடு போட்டு அதன் பசியை தீர்க்க வேண்டும். இது மனிதாபிமானம் உள்ளவர்கள் எல்லாரும் செய்யலாம். தண்ணியை வைத்தால் நாய்களின் கோவம் குறையும். நாய்களை ஒரே இடத்தில் அடைத்து வைத்தால் அடில் ரேபிஸ் இருக்கும் நாய்கள் இருக்கும் பட்சத்தில் அது எல்லா நாய்களுக்கும் பரவும். அதனால் ரேபிஸை பரவச் செய்வதற்காக இந்த முன்னெடுப்பு ஏற்பாடு செய்யப்படுகிறதா” எனக் கேள்வி எழுப்பினார்.

Actress director vasanth dog protest
இதையும் படியுங்கள்
Subscribe